மும்பைக்கு எதிரான போட்டியில் மறைந்த ஷேன் வார்னேவை கவுரவப்படுத்த திட்டமிட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம்

0
38
Shane Warne RR

ஆஸ்திரேலியா அணியின் லெஜெண்ட் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 52 வயதில் கடந்த மாதம் திடீரென உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.

ஷேன் வார்னே ஆஸ்திரேலிய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் அவரது தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ஆம் ஆண்டு (ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதல் வருடம் ) ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

மும்பையில் உள்ள டிஒய் பட்டில் மைதானத்தில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் வென்று ஐபிஎல் கோப்பையை வென்றது. தற்பொழுது அதே மைதானத்தில் வருகிற 30ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கின்றது.

ஷேன் வார்னேவின் வாழ்க்கையையும் பங்களிப்பையும் கொண்டாட விரும்புகிறோம் – ராஜஸ்தான் அணி நிர்வாகம்

டி ஒய் பட்டில் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் அன்று ஷேன் வார்னேவின் வாழ்க்கையையும் பங்களிப்பையும் கொண்டாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

பல சாதனைக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான அவருக்கு, அவர் முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய மைதானத்தில் வைத்து மரியாதை செலுத்துவது தான் சரியாக இருக்கும். இதைவிட சரியான நாள் வேறு எதுவும் இருக்காது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்காக பிசிசிஐ இடம் முறையான அனுமதியைப் பெற்றுள்ளது. அதன்படி வருகிற 30ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அனைவரும் இருக்கும் ஆட்டத்தில், ஷேன் வார்னேவின் சகோதரர் ஜேசன் வார்னே போட்டியை காண வருகிறார். அதேபோல 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய வீரர்கள் அனைவருக்கும் போட்டியை காண்பதற்கான அழைப்பு கடிதம் சென்றுவிட்டது.

அதுமட்டுமின்றி மைதானத்தின் ஒரு பகுதியில் ஷேன் வார்னே வின் சாதனைகள் மற்றும் அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் ஒரு கேலரியாக காட்சிப்படுத்த இருக்கின்றனர். மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் மற்றும் டி ஒய் பட்டில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் அந்த கேலரிக்கு சென்று அனைத்தையும் கண்டு களிக்கலாம். மேலும் அன்றைய போட்டியில் நடைபெற இருக்கும் கொண்டாட்டத்தை மற்ற ரசிகர்கள் வீட்டில் இருந்தபடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தின் சமூக வலைதளப் பக்கத்திலிருந்தும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வாயிலாகவும் கண்டுகளிக்கலாம்.