சற்றுமுன்: ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுகிறார்! – வெளியான தகவல்!

0
313

இந்திய உள்ளூர் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுவதாக தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இனி அவர் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட முடியாது.

முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, தனது சக நண்பரும் அணி வீரருமான மகேந்திர சிங் தோனி ஓய்வு முடிவு அறிவித்த அதே தருணத்தில் இவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாகவும் சென்னை ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று செல்லமாகவும் அழைக்கப்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா, 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய ஏலத்திற்கு முன்பாக சென்னை அணி இவரை தக்க வைக்கவில்லை. ஐபிஎல் ஏலத்திலும் இவரை எடுக்கவில்லை.

சுரேஷ் ரெய்னா தனது சிறந்த பார்மில் இல்லை என்றாலும் உணர்வுபூர்வமாக அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசிவரை எடுக்காததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். சமீப காலமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த சுரேஷ் ரெய்னா, நிச்சயம் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இடம் பெறுவார். குறிப்பாக சென்னை அணியில் ஏதேனும் ஒரு வீரருக்கு மாற்று வீரராக அறிவிக்கப்படலாம் என்ற மற்றொருபுற கணிப்புகளும் வெளிவந்து கொண்டிருந்தன.

இதற்கு இடையில் சுரேஷ் ரெய்னா வட்டாரத்தில் இருந்து வந்த தகவலின் படி, அவர் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்து இருக்கிறார். இதனால் ஐபிஎல் தொடரில் இனி விளையாடமாட்டார். பிசிசிஐ ஒப்பந்தப்படி உள்ளூர் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டால், வீரர்கள் சர்வதேச லீக் போட்டிகளில் விளையாடிக் கொள்ளலாம். அதன்படி வெளிநாட்டில் உள்ள உள்ளூர் டி20 லீக் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா பங்கேற்க உள்ளார் என்று வேறு சில தகவல்களும் வெளி வருகின்றனர்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். கடந்த இரண்டு சீசன்களாக அவர் விளையாடவில்லை என்பதால் சில இடங்கள் பின்னேறியிருக்கிறார். இதுவரை 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 5538 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது சராசரி கிட்டத்தட்ட 33 ஆகும். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 137 ஆகும்.

சென்னை அணியில் கடந்த இரண்டு சீசனங்களாக சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை என்றாலும் அவருக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இன்றளவிலும் நெருங்கிய உறவு இருக்கிறது. ஆகையால் தனது கடைசி ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி ஓய்வு பெறுவார். மேலும் சென்னை அணி அவருக்கு உரிய மரியாதையை செலுத்தி வழி அனுப்பும் என்ற எதிர்பார்ப்புகளும் சென்னை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தற்போது திடீரென சுரேஷ் ரெய்னா தரப்பில் இருந்து வந்திருக்கும் இந்த ஓய்வு முடிவு பல ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.