உலகக்கோப்பைகளில் தென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் மழை; இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு சாதகம்!

0
3696
T20iwc2022

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் 2 பிரிவில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஹோபர்ட் மைதானத்தில் மோதின!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். டாஸ் போடப்பட்ட பிறகு மழை வந்து குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டு 9 ஓவர்கள் கொண்டதாக முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

- Advertisement -

இதன்படி களமிறங்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 9 ஓவர்கள் முடிவில் 79 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியின் வெஸ்லி மாதவேர் 18 பந்துகளில் 35 ரன்களை 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் எடுத்தார்.

இதையடுத்து மழையின் அச்சுறுத்தலோடு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் முதல் ஓவரில் 23 ரன்கள் அடித்து அட்டகாசப் படுத்தினார். இதற்கு அடுத்த இரண்டாவது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார்.

ஆனால் ஆட்டம் மழையால் மீண்டும் தடைபட்டது. இதையடுத்து 7 ஓவர்களுக்கு 64 ரன்கள் என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி மீண்டும் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் அதிரடியில் ஈடுபட்டார். தென் ஆப்பிரிக்க அணி 3 ஓவர்கள் முடிவில் 51 ரன்களை எடுத்திருந்தபோது மீண்டும் மழை வந்து ஆட்டம் தடைபட்டது. அப்பொழுது குயின்டன் டி காக் 18 பந்துகளில் 47 ரன்களை 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் எடுத்திருந்தார்.

- Advertisement -

ஏற்கனவே ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்கி மீண்டும் தடைப்பட்டு தொடங்கி மீண்டும் மழை வந்த காரணத்தால், ஒரு போட்டிக்கான நேரம் முழுவதும் முடிந்துவிட்டது. இதனால் இந்த போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமனில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து வழங்கப்பட்டது.

இதில் ஒரு மோசமான சோகம் என்னவென்றால், இந்த ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி கணக்கிட 5 ஓவர்கள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் தென்ஆப்பிரிக்கா அணி 3 ஓவர்கள் மட்டுமே விளையாடி இருந்தது. தென் ஆபிரிக்க அணி 5 ஓவர்கள் விளையாடி இருந்தால் தற்போது விக்கெட் இழப்பின்றி 3 ஓவர்களில் எடுத்திருந்த 51 ரன்களே வெற்றிக்கு போதுமானது.

வெற்றிக்குத் தேவையான ரன்களை அடித்து இருந்தும், 5 ஓவர்கள் ஆட்டத்தில் விளையாட முடியாத காரணத்தால், தென்ஆப்பிரிக்கா அணி ஒரு சிறிய அணிவுடன் டிரா செய்ய வேண்டியதாய் போய்விட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு அரையிறுதிக்கு செல்வதிலும் சிக்கல்கள் உருவாகலாம். தென் ஆப்பிரிக்கா அணிக்கு மழையால் உலகக் கோப்பைகளில் தொடர்ந்து இப்படி துரதிஷ்டவசமாக நடந்து வருகிறது. 92ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆரம்பித்த சோகம் தற்போது வரை நிற்காமல் தொடர்கிறது!