நியூசிலாந்து, பங்களாதேஷ்.. இந்தியா வரிசையாக தோற்பதற்கு நானும்-ரோகித் சர்மாவுக்கும் காரணமா? – ராகுல் டிராவிட் பதில்!

0
2996

இந்திய அணி ஒருநாள் தொடரில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது எதனால்? என்று பேட்டியளித்து இருக்கிறார் ராகுல் டிராவிட்.

வங்கதேசம் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளையும் இழந்து தொடரையும் இழந்துள்ளது. முதல் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெறுவதற்கு 51 ரன்கள் தேவை என இருந்தபோது 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக முயற்சித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்று விட்டது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை போராடிய இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது. இதற்கு முன்பு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 1-0 என்ற கணக்கில் இழந்தது.

இந்த ஆண்டு இந்திய அணி இழக்கும் மூன்றாவது ஒருநாள் தொடர் இதுவாகும். இந்த இரண்டிற்கும் முன்பு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இப்படி வரிசையாக ஒரு நாள் தொடர்களில் தோல்வியை சந்தித்து வருவதற்கு என்ன காரணம்? என்று வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு பின்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார் ராகுல் டிராவிட்.

“2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு வருடங்களும் அடுத்தடுத்து உலகக்கோப்பை தொடர்கள் வந்ததால், இந்திய அணி டி20 போட்டிகளில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தது. ஒருநாள் தொடர்களில் பெரிதளவில் கவனம் செலுத்த இயலவில்லை. அதன் காரணமாக ஒருநாள் தொடர்களில் போதிய பயிற்சி இன்றி சில தவறுகள் நேர்ந்துள்ளது. இனி அடுத்த 9 மாதங்களுக்கு தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் மட்டுமே இருக்கின்றது.

ஓரிரு தொடர்களை வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம். வீரர்கள் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவர். போட்டியில் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து இழந்த வெற்றியை மீண்டும் பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுப்பர்.

காயம் அடைந்த பிறகு, கேப்டன் பொறுப்பில் இருக்கும் ரோகித் சர்மா விளையாடிய விதம் பலருக்கும் உதாரணமாக அமைந்திருக்கிறது. இறுதிவரை அவர் போராடிய விதம் ஆச்சரியப்படுத்தியது. துரதிஷ்டவசமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இருக்க மாட்டார். உடனடியாக மும்பை சென்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பதை பிறகு தான் கூற முடியும் என ராகுல் டிராவிட்.” பேசினார்.