இந்திய அணிக்குள் இப்படி தான் நடக்கிறது; ராகுல் டிராவிட் சொல்றத தான் செய்யணும்; தொடர் நாயகன் அர்ஷிதீப் சிங் ஓபன் டாக்!

0
3372

ராகுல் டிராவிட் என்னிடம் இதை மட்டும் செய்தால் போதுமானது என தெளிவுபடுத்தினார்; அதை நான் செய்தேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் இளம் வேகபந்துவீச்சாளர் அர்ஷிதீப் சிங்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய பிறகு ஐந்தாவது டி20 போட்டியில் பங்கேற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 64 ரன்கள், தீபக் ஹூடா 38 ரன்கள், கேப்டன் ஹர்டிக் பாண்டியா 28 ரன்களும் அடிக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து வலுவான நிலையை பெற்றது.

மிகப்பெரிய இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மிடில் ஆர்டரில் ஹெட்மாயர் 56 ரன்கள் அடித்ததே அந்த அணிக்கு ஆறுதலாக இருந்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இப்போட்டியை வென்றது. இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரில் இடம்பெற்ற இளம் வேகபந்துவீச்சாளர் அர்ஷதீப் சிங் தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பங்களிப்பை இந்திய அணியின் வெற்றிக்கு கொடுத்தார். குறிப்பாக நான்காவது டி20 போட்டியில் மூன்று ஓவர்களில் ஒரு மேய்டன் உட்பட 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இத்தொடரில் மொத்தம் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றிய அவருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. முதல் முதலாக தொடர் நாயகன் விருது பெற்ற இளம்பந்துவீச்சாளர் அர்ஷிதீப் பட்டேல் தனது பேட்டியில் கூறியதாவது:

“மிகவும் மகிழ்ச்சியான உணர்வாக இருக்கிறது. ராகுல் டிராவிட், நான் இந்திய அணிக்கு வந்தவுடன் என்னிடம் இது செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு அணியாகும். ஆகையால் உனது செயல்பாடு மட்டுமே முக்கியம். போட்டி வெற்றியில் முடிகிறதா? அல்லது தோல்வியில் முடிகிறதா? என்பது பற்றி உனது சிந்தனை இருக்கக் கூடாது என்று தெளிவாக கூறிவிட்டார்.

ஆகையால் எனக்கு அது எந்தவித பதட்டத்தையும் கொடுக்காமல் முற்றிலுமாக எனது பந்துவீச்சில் கவனம் செலுத்துவதற்கு உதவியது. மேலும் அணியில் வீரர்கள் மிக இயல்பாக பழகியதால் அவர்களுடன் இணக்கமான சூழல் ஏற்படுவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. இந்த அணியில் இளவீரர்களை பாகுபாடின்றி பக்கபலமாக இருந்து பார்த்துக்கொள்கிறார்கள். அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் மற்ற வீரர்களுடன் நல்ல உறவு ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் கொடுக்கும் ஊக்கமே காரணம். ஐபிஎல் போட்டிகளிலோ அல்லது உள்ளூர் போட்டியிலோ விளையாடிவிட்டு வரும் இளம் வீரர்களுக்கு இத்தகைய சூழல் மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும்.” என்றார்.