வீடியோ: காமன்வெல்த் இறுதி போட்டியில் மரண மாஸ் பீல்டிங் செய்த இந்திய வீராங்கனை; ஆண்களுக்கு இணையாக செய்கிறாரே, ஜாம்பவான்கள் பாராட்டு!!

0
51

காமன்வெல்த் இறுதிப் போட்டியில் வீராங்கனை ராதா யாதவ் மிகச் சிறப்பாக பீல்டிங் செய்து கேட்ச் மற்றும் ரன் அவுட் செய்த வீடியோ பதிவு பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகள் தொடரில் இந்த வருடம் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று ஆகஸ்ட் 7ஆம் தேதி பல பரிட்சை மேற்கொண்டன.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸி., அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் மூனே 41 பந்துகளில் 61 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய ரேணுகா சிங் மற்றும் சினே ராணா இருவரும் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.

வீராங்கனை ராதா யாதவ் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் முக்கியமான கட்டத்தில் ஒரு ரன் அவுட் செய்வதற்கு காரணமாக இருந்தார். மேலும் பீல்டிங்கில் அசத்திய இவர் அலனா கிங் என்பவர் அடித்த பந்தை தாவிப்பிடித்து அவுட் ஆக்கினார். ரன் அவுட் மற்றும் கேட்ச் இரண்டையும் செய்து ஃபீல்டிங்கில் அசத்திய இவருக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதன் வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் செம்ம வைரல்.

Brilliant run out by radha yadav
excellent catch by radha yadav

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மிடில் ஓவரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்வஸ் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹர்மன் பிரீத் 65 ரன்களுக்கும் ஜெமிமா 33 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீராங்கனைகள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் ஓரிரு ரன்களுக்கு தொடர்ந்து வெளியேறினர். இந்திய அணி வெற்றியின் தருவாயில் இருந்து தோல்வியை நோக்கி சென்றது. குறிப்பாக கடைசி 13 ரன்களில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெடுகளை கைப்பற்றியது. அதில் கார்டனர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

19.3 ஓவர்களில் இந்திய அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி வெற்றி பெற்று காமன்வெல்த் போட்டியில் தங்கத்தை தட்டிச் சென்றது. துர்காஷ்டவசமாக இந்திய அணிக்கு சில்வர் பதக்கமே கிடைத்தது. இந்திய அணி இரண்டாவது இடத்தை பெற்ற போதும் பலரும் ஆஸ்திரேலியாவை பாராட்டுவதை விட இந்திய அணியின் விடாமுயற்சியை பாராட்டி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

குறிப்பிடத்தக்க விதமாக, பிரதமர் நரேந்திர மோடி இந்திய பெண்கள் அணிக்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்த பாராட்டில், “இந்தியாவையும் கிரிக்கெட் போட்டியையும் பிரிக்க இயலாது. இந்திய பெண்கள் அணியை காமன்வெல்த் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கின்றனர். நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கின்றனர். இது நாட்டிற்கு மிகச்சிறப்பான தருணம். பெண்கள் அணிக்கு எதிர்காலம் மிகச் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.” தெரிவித்தார்.