உலகக் கோப்பை டி20 தொடர் போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்ப இருக்கும் பிவிஆர் சினிமாஸ் – உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்

0
142
Cricket Match in Theatre

இன்றுடன் ஐபிஎல் தொடர் நிறைவு பெற உள்ள நிலையில் வருகிற 17-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் தேதி வரை உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கிறது. ஐசிசியின் சர்வதேச தொடர்களை பொறுத்தவரையில், கடைசியாக இந்திய அணி 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வென்றது. அதன்பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் அந்த அணி எந்த ஒரு தொடரையும் கைப்பற்றவில்லை.

எனவே இந்த ஆண்டு நடைபெற இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரை இந்திய அணி நிச்சயமாக வென்றே தீரவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது “பிவிஆர் சினிமாஸ் உலக கோப்பை டி20 தொடர் போட்டிகளை நேரடியாக தன் திரையரங்களில் ஒளிபரப்ப போகிறது” என்கிற செய்தி அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

35 நகரங்கள் உட்பட 75 ஸ்கிரீன்களில் ஒளிபரப்ப இருக்கும் பிவிஆர் சினிமாஸ்

2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் போட்டிகள் திரையரங்குகளில் ஒளிபரப்பானது. அதேபோல தற்போது இந்த ஆண்டு பிவிஆர் சினிமாஸ் உலக கோப்பை டி20 தொடர் போட்டிகளை திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்பும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஐசிசி’யிடம் முறையான அனுமதியைப் பெற்றுக் கொண்டு கூடிய விரைவில் நடைபெற இருக்கின்ற உலக கோப்பை தொடர் போட்டிகளை அதன் திரையரங்குகளில் ஒளிபரப்ப இருக்கிறது.

நியூ டெல்லி, மும்பை, அகமதாபாத் என இந்தியா முழுக்க உள்ள 35 நகரங்களில், மொத்தமாக 75 ஸ்கிரீன்களில் பிவிஆர் சினிமாஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தயாராக இருக்கிறது. இந்தியாவில் எந்த அளவுக்கு சினிமா அனைவராலும் விரும்பி பார்க்க படுகிறதோ அதே அளவுக்கு கிரிக்கெட் போட்டிகளும் பார்க்கப்படும். எனவே இந்த செய்தி அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க விட்டுள்ளது.

புதிய ஜெர்சி மற்றும் புதிய வீரர்களுடன் களமிறங்க இருக்கும் இந்திய அணி

நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்,இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வருன் சக்ரவர்த்தி, ராகுல் சஹர் புதிய வீரர்களுடன் இந்திய அணி உலக கோப்பை டி20 தொடரில் விளையாட இருக்கிறது. ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராகவும் மகேந்திர சிங் தோனி ஆலோசகராகவும் இந்திய அணியை வழிநடத்த உள்ளனர்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி அக்டோபர் மாதம் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டியே பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு அந்த போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.