“ஐபிஎல்-ல் விளையாடியது உதவியது; நடக்கப் போவதை பற்றி கவலை இல்லை!” – டிம் டேவிட் தைரியம்!

0
72
Tim David

ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு இந்தியா வந்து இருக்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து அதை ஆஸ்திரேலிய அணி மிகச் சிறப்பாக சேஸ் செய்து வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் இந்த ரன் துரத்தலின் போது மிகச் சிறப்பாக செயல்பட்ட விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் உடன் களத்தில் நின்று வெற்றியை எளிதாக்கியவர் இருபத்தி ஆறு வயதான டிம் டேவிட். இவர் இதற்கு முன்பு சிங்கப்பூர் தேசிய அணிக்கு விளையாடி, அப்போது ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்.

ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறுவதற்கு முன்பு உலகம் முழுவதும் நடக்கும் டி20 தொடர்களில் பங்கேற்று வந்தார். ஆறடி உயரத்திற்கு மேல் ஆஜானுபாகுவாய் இருக்கும் இவரது பேட்டிங் மிகவும் அதிரடியாக இருக்கும். ஷாட்கள் அவ்வளவு வலிமையாக இருக்கும். இவரது பேட்டில் இருந்து பெரிய பெரிய சிக்ஸர்கள் பறக்கும். இவர் சிங்கப்பூரை விட்டு தன் தந்தையால் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துஅங்கு வசித்து வந்ததால், மேலும் இவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்ததால், இவருக்கு மிகப் பெரிய அணியான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது.

இவர் முதன்முதலில் இந்திய ஐபிஎல் தொடரில் அறிமுகமானது 2021 ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷார்ஜாவில் அறிமுகமானார். இதற்கடுத்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இவரை 8 கோடி கொடுத்து மும்பை அணி எடுத்தது. இந்த ஆண்டு இவருக்கு மும்பை அணிக்காக விளையாட எட்டு வாய்ப்புகளும் கிடைத்தது.

தற்போது ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்திருக்கும் இவரிடம் சில முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. முதல் ஆட்டத்தை இந்தியாவில் விளையாடியது எப்படி இருந்தது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதிலளித்தார்.

இதுகுறித்து கூறிய டிம் டேவிட் ” முன்பு இந்தியாவில் விளையாடிய அனுபவமும், சமீபத்தில் டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இருந்ததால், அந்த ரன்களை துரத்துவதற்கு நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று அறிந்ததால், அந்த நாள் இரவு நான் நிம்மதியாக உணர்ந்தேன்” என்று கூறினார்.

மேலும் ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கும் என்று நீங்கள் எதிர் பார்த்தீர்களா என்ற கேள்வி அவரிடம் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” உண்மையில் நான் இதுகுறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இருந்தேன். இந்த இடம் கிடைத்தது எனக்கு இயல்பாக அமைந்தது. நான் என்னுடைய விளையாட்டை மிகவும் எளிமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறேன். மேலும் எனக்கு முன்னால் இருக்கும் விளையாட்டை மட்டுமே வெல்ல விரும்புகிறேன். மேற்கொண்டு எந்த எதிர்பார்ப்பும் எனக்கு கிடையாது. நான் நிலையாக இருக்க விரும்புகிறேன் மேலும் கடின பயிற்சிகளின் மூலமாக என்னை எல்லாவற்றுக்கும் தகுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் ” என்று கூறியிருக்கிறார்.