” பாதை சவாலாகவும் கடினமாகவும் தான் இருக்கும் ” தன் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அறிவுரை வழங்கிய சச்சின்

0
138
Sachin Tendulkar advice to Arjun Tendulkar

இந்திய கிரிக்கெட் என்றில்லாமல் உலக கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் அதில் சச்சின் டெண்டுகல்கர் என்கின்ற பெயரின் மதிப்பும் தரமும் மிக உயர்ந்தது. 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கராச்சியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர், 2013ஆம் ஆண்டு நவம்பர் மும்பை வான்கடே மைதானத்தில் ஓய்வு பெற்றார். இடையில் 24 வருடங்கள் கிரிக்கெட்டிற்கும், இந்திய கிரிக்கெட்டிற்கும் அவர் செய்துள்ள சிறப்பான பணிகளும், சாதனைகளும் ஏராளம்.

கிரிக்கெட் உலகம் கிரிக்கெட்டை சச்சினுக்கு முன், பின் என்றுதான் பிரிக்கிறது. நவீன கிரிக்கெட்டின் துவக்கமாகச் சச்சின் இருக்கிறார். ஒருநாள் போட்டி விதிகள் திருத்தப்பட்டு, வண்ண சீரூடைகளிலிருந்து, இரவு பகல் ஆட்டங்களென சுவாரசியப் படுத்தப்பட, அங்கு களத்தில் நவீன கிரிக்கெட்டின் பிரபல தூதுவராக தன் கிரிக்கெட் திறமையால் வலம் வந்தவர் சச்சின்.

- Advertisement -

200 டெஸ்ட் போட்டிகளில் 329 இன்னிங்ஸ்களில் 15,921 ரன்களையும், 463 ஒருநாள் போட்டிகளில் 452 இன்னிங்ஸ்களில் 18,426 ரன்களையும் குவித்திருக்கிறார். டெஸ்டில் 51 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களென மொத்தம் 100 சதங்களை சர்வதேச போட்டிகளில் அடித்த ஒரே பேட்ஸ்மேனாக சச்சின் இருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய சச்சின், சர்வதேச போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற 2013ஆம் ஆண்டே, ஐ.பி.எல் தொடரிலிருந்தும் ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு மும்பை அணியின் சிறப்பு ஆலோசராகத் தொடர்ந்து வருகிறார். இதே மும்பை அணியில் 2021ஆம் ஆண்டு இவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் வாங்கப்பட்டு, இந்த வருட மெகா ஏலத்திலும் மும்பை அணியாலே முப்பது இலட்சத்திற்கு மீண்டும் வாங்கப்பட்டார். இடக்கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர் 2018ஆம் ஆண்டு அன்டர் 19 இந்திய அணிக்காக இலங்கைக்கு எதிராக அறிமுகமானார். பின்பு 2021ஆம் ஆண்டு மும்பை அணிக்காக சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஹரியானா அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார்.

நடப்பு ஐ.பி.எல் சீசனில் மும்பை அணி முதல் எட்டு ஆட்டங்களில் தோற்று, முதல் அணியாக ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருக்க, மேற்கொண்டு விளையாடும் ஆட்டங்களில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக மும்பை அணிக்காகக் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு பொதுவாகவே இருந்தது. குறிப்பாக டெல்லி எதிரான மும்பை அணியின் கடைசி லீக் போட்டியில் அவர் களமிறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் அவருக்கு மும்பை அணியில் இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

இதுக்குறித்து ஒரு நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கரிடம் கேட்ட பொழுது அவர் “இது தொடர்பாக நான் என்ன நினைக்கிறேன், என்ன உணர்கிறேன் என்பது முக்கியமில்லை. தொடரும் முடிந்துவிட்டது. அர்ஜூன் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். அவர் அணியில் தேர்வாவதைப் பற்றி யோசிக்க கூடாது. மேலும் நான் மும்பை அணித்தேர்வில் ஈடுபடுவதில்லை. அதை நான் அவர்களிடமே விட்டுவிடுவேன். அர்ஜூனுடனான எனது உரையாடலில் நான் எப்போதும் சொல்வது, பாதை கடினமாகச் சவாலாகத்தான் இருக்கும். நீங்கள் கிரிக்கெட்டை விரும்பி தேர்ந்தெடுத்து இருக்கிறிர்கள். எனவே அதில் தொடர்ந்து கடினமாக உழையுங்கள், நல்ல முடிவுகள் பின்னாலே வரும் என்று கூறியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்!