ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனாகிறார் பேட் கம்மின்ஸ்!

0
219

ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் பேட் கம்மின்ஸ்.

இந்திய அணியுடன் டி20 தொடர் துவங்குவதற்கு முன்பாக, ஆஸ்திரேலியாவின் லிமிடெட் ஓவர் போட்டிகளின் கேப்டனாக இருந்து வரும் ஆரோன் பின்ச் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவேன் என்று அவர் தனது ஓய்வு அறிக்கையில் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து வரும் பேட் கம்மின்ஸ், ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்றவுடன், நவம்பர் 17ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடவுள்ளது. இந்த தொடரில் இருந்து கம்மின்ஸ் தனது கேப்டன் பொறுப்பை ஒருநாள் போட்டிகளில் தொடர்வார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

ஒருநாள் போட்டிகளுக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து கம்மின்ஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: “ஆரோன் பின்ச் தலைமையில் நான் விளையாடியதை மிகவும் மகிழ்வுடன் செய்தேன். அவரின் தலைமையில் எண்ணற்ற அனுபவங்களையும் நுணுக்கங்களையும் நான் பெற்றிருக்கிறேன். அவரைப் போன்ற சிறந்த வீரர்களின் இடத்திற்கு வருவதை நினைத்து பெருமிதமாக எண்ணுகிறேன். பின்ச் தலைமையில் தான் நான் நிறைய அனுபவங்களை பெற்றிருக்கிறேன். ஆகையால் நிச்சயம் அவரது இடத்தை நிரப்புவதற்கு என்னால் முடிந்ததை செய்வேன்.” என்றார்.

இது குறித்து தேர்வுக்குழு அதிகாரி ஜார்ஜ் பெய்லி கூறுகையில், “பேட் கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடியதிலிருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆகையால் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, இவரை நியமித்தால் சரியாக இருக்கும் என்று தேர்வுக்கு குழுவினர் அனைவரும் ஒன்றாக முடிவெடுத்தோம்.” என தனது பேட்டியில் குறிப்பிட்டார்.