கடைசி டெஸ்ட் போட்டியுடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஓய்வு அறிவிப்பு

0
3701

இங்கிலாந்து அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கராச்சி நகரில் நடைபெறுகிறது .

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்றுவிட்ட நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று ஒயிட் வாசில் இருந்து காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தான் அணி போராடும் . இந்த போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர் .

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனுமான ‘அசார் அலி’ நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார் .

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “பாகிஸ்தான் அணிக்காக ஆடியது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் .இத்தனை நாள் பாகிஸ்தான் அணிக்காக ஆடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். ஓய்வு பற்றிய முடிவை எப்போது எடுத்தாலும் அது கடினமான ஒன்றுதான் இருந்தாலும் நீண்ட நாட்கள் யோசித்து இதுதான் சரியான நேரம் என்பதால் இந்த டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக” கூறினார் .

மேலும் பேசிய அவர் தனது குடும்பத்தினர் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து பேசுகையில் ” என்னுடைய குடும்பத்தினரின் ஆதரவு மட்டும் இல்லை என்றால் இந்த அழகான மற்றும் கடினமான பயணம் இன்னும் கடினமாக இருந்திருக்கும் . என்னுடைய ஓய்வு அறிவிக்கும் இந்த ஒரு பூர்வமான தருணத்தில் என்னுடைய பெற்றோர் மனைவி சகோதர சகோதரிகள் மற்றும் குழந்தைகளின் தியாகங்களை நினைத்துப் பார்க்கிறேன்” என்று கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வீரர்களுடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது வாழ்வில் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று, என்னுடன் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய வீரர்களை நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் இந்த நேரத்தில் என் உடன் விளையாடிய சக வீரர்களுக்கும் என்னுடைய முன்னாள் மட்டும் இந்நாள் கேப்டன்களுக்கும் என்னுடைய எல்லா பயிற்சியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி முடித்தார் .

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள அசார் அலி 7097 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 42.49 . டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்களையும் 34 அரை சதங்களையும் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 302 ரன்கள் ஆகும் . இவர் தான் பாகிஸ்தான் அணிக்காக பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் மூன்று சதம் அடித்த ஒரே வீரர் ஆவார் . பாகிஸ்தான் அணிக்காக அதிக டெஸ்ட் ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார் .

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அசார் அலி இதுவரை பாகிஸ்தான் அணிக்காக ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது