உணவு இடைவேளைக்குள் பாகிஸ்தானை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து.. 202க்கு ஆல்-அவுட்!

0
1043

பாகிஸ்தான் அணியை 202 ரன்களுக்குள் சுருட்டி 79 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது இங்கிலாந்து அணி.

நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக பென் டக்கட் 63 ரன்களும், ஆலி பாப் 60 ரன்களும் எடுத்திருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு அறிமுகவீரர் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 107 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 75 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பாபருடன் பாட்னர்ஷிப் அமைத்திருந்த சவுத் சக்கில் 63 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு வரிசையாக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்து வந்தனர்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் 142 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் இழந்திருந்த பாகிஸ்தான் அணி. அதன் பிறகு ஒவ்வொரு ஐந்து முதல் 10 ரன்கள் இடைவெளியில் ஒவ்வொரு விக்கெட்டாக இழந்து 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் ஜாக் லீச் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். மார்க் வுட் மற்றும் ஜோ ரூட் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

உணவு இடைவெளிக்குள் பாகிஸ்தான் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இங்கிலாந்து அணி தற்போது 79 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. உணவு இடைவெளிக்கு பின் தனது இரண்டாவது இன்னிசை இங்கிலாந்து அணி துவங்க உள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.