இந்த இந்திய வீரர் போல் ஒருவர் பாகிஸ்தான் அணிக்கு கட்டாயம் வேண்டும் – ஷாகித் அப்ரிடி!

0
3704
Afridi

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் நாட்டிற்கு எந்த பெரிய கிரிக்கெட் நாடுகளும் வந்து கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு உருவானது!

இப்படி உருவான பொருளாதார இழப்பின் காரணமாக பாகிஸ்தானின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியானது? ஏனென்றால் பொருளாதாரம் இல்லாத காரணத்தால் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது கடினமாக மாறிவிட்டது.

- Advertisement -

இதன்பின் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கொண்டுவரப்பட்டார். அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டதற்கு பிறகு பெரிய கிரிக்கெட் நாடுகள் பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் விளையாட கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தது. இதற்குப் பிறகு நிலைமைகள் மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது. தற்போது 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு வந்துள்ளது.

இந்தத் தொடர் குறித்தும், பாகிஸ்தான் அணியின் எதிர்காலம் குறித்தும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் சாகித் அப்ரிடி சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பாகிஸ்தான் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி சாகித் அப்ரிடி கூறும்பொழுது
” ஹர்திக் பாண்டியாவைப் போல ஒரு பினிஷர் நம்மிடம் இல்லை. குறைந்தது இரண்டு பேராவது சீராக இருக்கவேண்டும். சதாப் கான் பந்துவீசும் காலம் மிக முக்கியமானது. அவர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் காலத்தில் அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் ” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய சாகித் அப்ரிடி ” நாங்கள் இப்பொழுது விளையாடும் ஆடுகளங்களில் இரண்டு முழுமையான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை. நாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ள புதுப் பையன் ஜமாலை நீங்கள் ஏன் முயற்சி செய்து பார்க்க கூடாது? அவரை நீங்கள் ஆல்-ரவுண்டராக விளையாடுங்கள். அவர் பந்துவீசி பேட்டிங்கும் செய்யட்டும். பிறகு நீங்கள் அவர் எந்த மாதிரியான கிரிக்கெட் வீரர் என்று அறிந்துகொள்வீர்கள் ” என்று ஆலோசனை கூறி இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கனவு கண்டால், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். சமீப போட்டிகளில் அவர்கள் செய்து வரும் சில தவறுகளை சரிசெய்ய வேண்டும்” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.