18 வருட சர்வதேச பயணத்திற்கு முற்றுப்புள்ளி போட்ட பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் – உணர்ச்சி பொங்க வெளியிட்ட ஓய்வு அறிக்கை இணைப்பு

0
301
Mohammad Hafeez Retirement

பாகிஸ்தான் அணியில் விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர்களில் மிக முக்கியமாக பார்க்கப்படும் வீரர்களில் முகமது ஹபீஸ்சும் ஒருவர். 2003ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்காக சுமார் 18 வருடங்கள் தொடர்ந்து சர்வதேச அளவில் விளையாடியுள்ளார். அவர் இன்று தன்னுடைய ஓய்வு அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக முகமது ஹபீஸ் கொடுத்த பங்களிப்பு

55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,652 ரன்களும், 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,614 ரன்களும், 119 டி20 போட்டிகளில் விளையாடி 2,514 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி தன்னுடைய அபாரமான பந்து வீச்சின் மூலமாக டெஸ்ட் போட்டியில் 53 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டியில் 139 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டிகளில் 61 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் அணியில் விளையாடிய வீரர்கள் மத்தியில் 12,000 ரன்களுக்கு மேல் குவித்து அதேசமயம் 250க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையுடன் இவர் ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 392 போட்டிகளில் விளையாடி இதுவரை 32 முறை ஆட்டநாயகன் விருதை அவர் பெற்றுள்ளார்.பாகிஸ்தான் அணி வீரர்கள் மத்தியில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் அவர் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி மிக அற்புதமாக விளையாடி கைப்பற்றியது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த முகமது ஹபீஸ் பேட்டிங்கில் 5 போட்டிகளில் 148 ரன்கள் குவித்து இருந்தார். அந்த தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் மத்தியில் அதிக ரன்கள் குவித்த 3வது வீரராக அவர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பந்துவீச்சில் அந்த தொடரில் மொத்தமாக 24 ஓவர்கள் வீசி 123 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

சமூக வலைத்தளத்தில் உணர்ச்சி பொங்க தன்னுடைய ஓய்வு அறிக்கையை கூறிய முகமது ஹபீஸ்

“பாகிஸ்தான் அணியுடனான என்னுடைய பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. 18 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்கு நான் விளையாடியதை மிகவும் பெருமையாக எண்ணுகிறேன். அந்தப் பெருமை உடனே நான் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று உணர்ச்சி பொங்க முகமது ஹபீஸ் தன்னுடைய ஓய்வு குறித்து ட்விட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

18 ஆண்டுகள் பாகிஸ்தான் அணியில் விளையாடி ஓய்வு பெற்றுள்ள அவருக்கு தற்போது பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் இணைந்து நன்றி தெரிவிக்கும் வகையில் எக்கச்சக்கமான பதிவுகளை பதிவேற்றி வருகின்றனர்.