2023 ஆசியகோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான் அணி; இந்தியாவை காரணம் காட்டுகிறது..! என்ன நடந்தது?

0
3964

இப்படி நடந்தால் பாகிஸ்தான் அணி 2023 ஆம் ஆண்டு ஆசியகோப்பையில் இருந்து விலகும் என்று அறிவித்திருக்கிறார் அதன் கிரிக்கெட் நிர்வாக தலைவர் ரமீஷ் ராஜா.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியை விட சுவாரசியமான நிகழ்வு இரு அணி நிர்வாகங்களுக்கும் இடையே நடைபெற்று வருகிறது.

2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி அதில் பங்கேற்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டி20 உலக கோப்பையின் போது கொடுத்த போட்டியில் தெரிவித்தார்.

“இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் நடைபெற்றால் மட்டுமே இந்தியா பங்கேற்கும்.” என்றும் ஜெய் ஷா பேட்டியில் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ரமீஷ் ராஜா, “ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் வந்து பங்கேற்க மாட்டோம் என்று உறுதி செய்தால், பாகிஸ்தான் அணியும் இந்தியாவில் நடக்கும் 2023 50-ஓவர் உலக கோப்பையில் பங்கேற்காமல் புறக்கணிப்போம்.” என்று பதிலடி கொடுத்தார்.

ரமீஷ் ராஜாவின் பேச்சுக்கு இந்திய அணி நிர்வாகம் சற்றும் செவி சாய்க்கவில்லை. தற்போது வரை முன்பு கூறியதைப் போல, பாகிஸ்தான் சென்று பங்கேற்க மாட்டோம் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறது பிசிசிஐ.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரு அணிகளுக்கு இடையே மீண்டும் இரு தரப்பு தொடர்கள் நடைபெற வேண்டும்; அதற்கு முதல் முன்னேற்பாடாக இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆசிய கோப்பையில் பங்கேற்க வேண்டும் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் பி சி சி ஏ இதற்கும் செவிசாய்க்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் தலைவர் ரமீஷ் ராஜா. சமீபத்தில் அளித்த பேட்டியில், “பிசிசிஐ தங்களது முடிவுகளில் பிடிவாதமாக இருப்பது போல் பாகிஸ்தான் அணி நிர்வாகமும் உறுதியாக இருக்கிறது. 2023 ஆசியகோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்கும் என திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தானில் நடக்காமல் பொது இடத்தில் நடந்தால், அடுத்த நிமிடமே பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் இருந்து விலகிக் கொள்ளும். தாராளமாக பொது இடங்களில் நடத்தலாம்.” என்று அதிரடியாக அறிவித்தார்.

மேலும் பேசிய அவர், “எங்களது நாட்டின் ரசிகர்கள் ஆசியகோப்பை பாகிஸ்தானில் நடக்க உள்ளது நினைத்து பேரார்வத்தில் இருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றம் ஆக்க எங்களது கிரிக்கெட் வாரியம் ஒருபோதும் நினைத்தது இல்லை. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக சிலர் இப்படி செய்வது முற்றிலும் வரவேற்கத்தக்கது அல்ல.” என்றும் குறிப்பிட்டார்.