ஆசியக்கோப்பை முக்கியமில்லை; இந்திய அணியுடனான போட்டிகள்தான் முக்கியம் – பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

0
220
Asiacup 2022

6 ஆசிய நாடுகளைக் கொண்டு வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் ஆசிய கோப்பை போட்டி டி20 வடிவத்தில் நடக்க இருக்கிறது. ஆசிய கோப்பை போட்டியில் இந்த முறை கோப்பையை வென்ற அணியாக இந்தியா ஏழு முறை கோப்பையை வென்று இருக்கிறது!

இந்த தொடரில் பங்குபெறும் 6 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன, இதில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணி என ஒரு பிரிவு இருக்கிறது. மற்றொரு பிரிவில் இலங்கை பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் இருக்கிறது.

இதில் இரண்டு குழுக்களிலும் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், அடுத்து சூப்பர் 4 எனும் சுற்றுக்கு வருகின்றன. இதில் நான்கு அணிகளும் மற்ற அணிகளை எதிர்த்து ஒவ்வொரு முறை மோத வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் ஆகும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் இந்த தொடரில் குறைந்தபட்சம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதுவது ஏறக்குறைய உறுதி. இரண்டு அணிகளுமே தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம். அப்படி இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், இந்த ஆசியக் கோப்பை ஒரே தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதும் நிகழ்வு நடைபெறும். இது இரு நாட்டு ரசிகர்களையும் தாண்டி இருநாட்டு கிரிக்கெட் வாரியத்தையும் மிக மிக அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் தவ்சிப் அகமத் இதை வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியிருக்கிறார். இவர் பாகிஸ்தான் அணிக்காக 1980 முதல் 1993 ஆண்டு வரை முப்பத்தி நான்கு ஒருநாள் போட்டிகள் 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கையை விமர்சித்து கூறும்பொழுது அதில் ” நீண்ட காலமாகவே இப்படித்தான் நடந்து வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு அணியில் இருந்து வெளியேறிய வீரர்கள், பின்பு ஏதோ ஒரு காரணத்தால் ஏதாவது ஒரு வழியில் அணிக்குள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அணியில் இருந்து வெளியேற்றிய வீரர்களை மீண்டும் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது என்றால், இவர்கள் எதிர்காலத்திற்காக எந்த ஒரு முன் தயாரிப்பும் செய்து வைக்க வில்லை என்பதையும், அவர்களிடம் எந்தத் திட்டங்களும் இல்லை என்பதையும் தான் காட்டுகிறது. மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசியுள்ள இவர் ” இவர்கள் இன்னும் செட்டில் ஆகவில்லை. சவுத் சகில் போன்று 2, 3 வீரர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இப்போது எங்கு என்று தெரியவில்லை. நாங்கள் அணி நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சோயிப் மாலிக்கை இந்த முறை அணியில் எடுப்பார்கள் என்று நாங்கள் நினைத்தோம். மிடில் ஆர்டருக்கு பேட்ஸ்மேன்கள் இல்லாத போதும் அவரை எடுக்கவில்லை. மேலும் இவர்களுக்கு ஆசியக் கோப்பை முக்கியமாய் தெரியவில்லை. இவர்களுக்கு இந்தியாவுடன் விளையாடும் 2, 3 போட்டிகள் தான் முக்கியமானது. இது ஒரு நல்ல வழி அல்ல. சீக்கிரத்தில் சரியான திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்தி பாகிஸ்தானின் எதிர்கால கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்” என்றும் தெரிவித்து இருக்கிறார்!