நான்கு ரன்னில் இரட்டைச் சதத்தை தவறவிட்ட பாபர் அசாம் ; 4வது இன்னிங்சில் வரலாற்றுச் சாதனை

0
212
Babar Azam

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியும் தற்பொழுது சமனில் முடிந்துள்ளது.

கராச்சியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 556 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 160 ரன்கள் குவித்தார்.பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 36 ரன்கள் குவித்தார்.

பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் அணி வெற்றி பெற 506 ரன்கள் தேவைப்பட்டது.

நங்கூரம் போல பாகிஸ்தான் அணியை தாங்கிப் பிடித்த பாபர் அசாம்

கடினமான இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி. பின்னர் பாபர் அசாம் மற்றும் ஷாபிக் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். ஒரு கட்டத்தில் ஷாபிக் 96 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் முஹம்மது ரிஸ்வான் உடன் கைகோர்த்த பாபர் அசாம் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் பொறுமையை சோதித்தார். 425 பந்துகளை பிடித்து 21 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 196 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

இன்றைய ஐந்தாவது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்தது. போட்டியும் இன்று இறுதியில் சமனில் முடிவடைந்தது. பாபர் அசாமுடன் ஈடுகொடுத்து விளையாடிய முஹம்மது ரிஸ்வான் 177 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உட்பட 104* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சாதனைகளை தன் பெயருக்குப் பின்னால் எழுதிய பாபர் அசாம்

ஒரு டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்சில் அதிக ரன்களை குவித்த கேப்டன்கள் மத்தியில் மைக்கேல் ஏதர்டன் (1995ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக – 185* ரன்கள் ) முதல் இடத்தில் இருந்தார். தற்பொழுது அவரை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு பாபர் அசாம் (இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 196 ரன்கள்)முன்னேறியுள்ளார்.

அதேபோல ஒரு டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த ஆசிய வீரர்கள் மத்தியில் முதலிடத்தில் சுனில் கவாஸ்கர் (1979ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 221 ரன்கள்) இருக்கிறார்.அவருக்கு அடுத்தபடியாக நேற்றுவரை குமார் சங்ககாரா (2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 191* ரன்கள்) இருந்து வந்தார்.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 196 ரன்கள் குவித்த காரணத்தினால் தற்போது பாபர் அசாம் சங்கக்காராவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல ஒரு டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்சில் அதிக நிமிடங்களை பிடித்து விளையாடிய இரண்டாவது வீரராக இன்று பாபர் அசாம் மற்றொரு சாதனையும் படைத்திருக்கிறார்.