2009ஆம் ஆண்டிற்கு பிறகும் ஐபிஎல் தொடரில் விளையாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள்

0
682
Imran Tahir and Usman Khawaja IPL

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதல் வருடமான 2008’இல் பாகிஸ்தான் அணி வீரர்களும் பங்கெடுத்து விளையாடினார்கள். அந்த வருடம் ஷோயப் அக்தர், மிஸ்பா உல் ஹக், சோயப் மாலிக், ஷாகித் அப்ரிடி, கம்ரன் அக்மல், சொஹைல் தன்வீர் என பல்வேறு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கெடுத்து இந்தியாவில் விளையாடினார்கள்.

ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு பாகிஸ்தான் அணி வீரர்களால் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அரசியல் ரீதியாக மிகப் பெரிய பிரச்சனை கிளம்ப, தற்பொழுது வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழ் நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் உள்ளனர்.

இருப்பினும் 2008-ம் ஆண்டுக்குப் பிறகும் ஐபிஎல் தொடரில், பாகிஸ்தானில் பிறந்த அல்லது பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருசில கிரிக்கெட் வீரர்கள் விளையாடினார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு சிலர் தற்பொழுதும் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.

இம்ரான் தாஹிர்

இவர் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்தவர். பாகிஸ்தான் அணிக்காக அண்டர்-19 கிரிகெட் அணியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பின்னர் பாகிஸ்தான் ஏ அணியிலும் விளையாடிய இவரால், சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணிக்காக விளையாட முடியாமல் போனது. மனம் தளராத இவர் இங்கிலாந்துக்குச் சென்று கவுண்டி கிரிக்கெட் தொடர்களில் விளையாடினார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று அங்கே டொமஸ்டிக் பவுல் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆண்டுகாலம் விளையாடினார். இவரது உழைப்புக்கு கிடைத்த பரிசாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் சர்வதேச அளவில் இவரை விளையாட வைத்து அழகு பார்த்தது. ஐபிஎல் தொடரில் 2014 முதல் 2016ம் ஆண்டு வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார். அதன் பின்னர் 2018 முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இம்ரான் தாஹிர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒவைஸ் ஷா

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்த இவர் இங்கிலாந்துக்குச் சென்று அங்கே கிரிக்கெட் விளையாடினார். கவுன்டி கிரிக்கெட் தொடர் மற்றும் பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, அண்டர் 19 அணியிலும் இடம் பெற்று இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார். இவரது ஆட்டத்தை கண்ட இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், பின்னர் சர்வதேச அளவிலும் இவரை விளையாட வைத்தது.

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதல் வருடமான 2008’இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஒவைஸ் ஷா விளையாடினார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு கொசி டஸ்கேர்ஸ் கேரள அணிக்காகவும், 2012 ஆம் ஆண்டு தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் ஒவைஸ் ஷா விளையாடினார்.

அலி கான்

பாகிஸ்தானில் பிறந்த இவர் தன்னுடைய 19வது வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்னர் அங்கே கிரிக்கெட் விளையாடி தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடி வருகிறார்.
2018 ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவரை, 2020 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாடும் வைக்கும் முடிவை எடுத்தது.

கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரி குர்நேவால் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. எனவே அவருக்கு மாற்று வீரராக அலி கானை கடந்த ஆண்டு கொல்கத்தா அணி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அசார் மமஹ்மூத்

பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் பிறந்த இவர் ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரராவார். பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அளவில் இருபத்தி ஒரு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். குறிப்பாக இவர் 176 பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய மனைவி பிரிட்டிஷை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு குடியுரிமை ( பாகிஸ்தான் மற்றும் பிரிட்டிஷ் )உள்ளது.

தன்னுடைய பிரிட்டிஷ் குடியுரிமையை வைத்து ஐபிஎல் தொடரில் இவர் 2013ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு முதல் முறையாக விளையாடினார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் அசார் மமஹ்மூத் விளையாடினார்.

உஸ்மான் கவாஜா

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் பிறந்த இவர் தன்னுடைய ஐந்து வயதில் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் அங்கே வளர்ந்து கிரிக்கெட் விளையாட தொடங்கிய இவர், நாளடைவில் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அளவில் இடம் பெற்று தற்பொழுது வரை விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் 2016 ஆம் ஆண்டு, அந்த ஒரே ஒரு வருடம் மட்டும் ரைசிங் புனே சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடினார். அதன் பின்னர் எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் இதுவரை இவர் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.