38 ரன்களுக்கு சுருண்டது ஹாங்காங்; அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்!

0
28
Pak vs Hkg

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை தொடரில் இன்று ஒரு நாக் அவுட் போட்டி போன்ற முதல் சுற்றில் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சார்ஜா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின!

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்ற ஹாங்காங் அணி கேப்டன் வழக்கம்போல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் இன்னிங்சை துவக்க கேப்டன் பாபர் ஆஸம் முகமது ரிஸ்வான் இருவரும் களம் புகுந்தனர். முதல் இரண்டு ஓவர்களில் ரன் வராது பாகிஸ்தான் அணி தடுமாறியது.

இதற்கடுத்து ஹாங்காங் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் எஷான் கான் தானே பந்துவீசி தானே கேட்ச் பிடித்து பாகிஸ்தான் கேப்டன் பாபரை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். ஹாங்காங் அணிக்கு இந்த ஆட்டத்தில் நடந்த மகிழ்வான ஒரே ஒரு விஷயம் இது மட்டும்தான். இவர் இதற்கு முன்னால் இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி ரோகித்சர்மா ஆகியோரை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான், பகர் ஜமான் ஜோடி ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஆனால் அதற்குப் பின்பு நின்று ஹாங்காங் அணியின் அனுபவமற்ற பந்து வீச்சை சிதறடித்தது. இருவருமே அரைசதத்தை கடந்தார்கள். நாற்பத்தி ஒரு பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் பகர் ஜமான் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கடுத்து முஹம்மது ரிஸ்வான் உடன் இடதுகை வீரர் குல்தில் ஷா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெறும் இருபத்தி மூன்று பந்துகளில் அறுபத்தி நான்கு ரன்களை குவித்து மிரட்டியது. குறிப்பாக குல்தில் ஷா கடைசி ஓவரில் 4 சிக்சர்களை தொடர்ந்து விளாசி மிரட்டினார். இது மட்டும் இல்லாமல் இந்த ஓவரில் வைட் பவுண்டரி மூலம் 5 ரன்கள் வந்தது. இந்த ஒரே ஓவரில் 29 ரன்கள் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்தது. டி20 சர்வதேச போட்டியில் கடைசி ஓவரில் ஒரு அணிக்கு கிடைத்த அதிக ரன்கள் இதுதான். இறுதி வரை ஆட்டமிழக்காமல் முகமது ரிஸ்வான் 57 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 193 ரன்கள் குவித்தது. ஹாங்காங் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் எஷான் கான் மட்டுமே 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணிக்கு அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள் என்றே கூறலாம். அந்த அணியின் எந்த ஒரு பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தில் ரன்னை அடிக்கவே இல்லை. அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, 10.4 ஓவர்களில் அந்த அணி 38 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆசிய கோப்பையில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். அந்த அணியில் கேப்டன் நிஷாகாத் கான் அதிகபட்சமாக 8 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் சதாப் கான் 2.4 ஓவர்கள் பந்து வீசி 8 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொகமத் நவாஸ் 2 ஓவர்கள் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நதிம் ஷா 2 ஓவர்கள் பந்துவீசி 7 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷாநவாஸ் டகானி 2 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் செய்து 7 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்த அபார வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் இந்தியா இலங்கை வரிசையில் நான்காவது அணியாக அடுத்து சூப்பர் 4 சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற்று இருக்கிறது. சுற்றில் பாகிஸ்தான் அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியை எதிர்கொள்கிறது. இரண்டு வாரம் ஞாயிற்றுக்கிழமை எழில் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் கிடைப்பது தற்போதுள்ள சூழலில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விஷயம் என்பது முக்கியம்!