2011 உலகக் கோப்பை இந்திய அணியின் மனநலப் பயிற்சியாளர் பேடி அப்டன் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார்

0
85

கிரிக்கெட் நவீனப்பட நவீனப்பட எல்லாம் துல்லியமாகிக் கொண்டே வருகிறது. சக அணி வீரரின் நிறை குறைகறை ஆராய்வதிலிருந்து, எதிரணியின் மொத்தத்தையும் விரல் நுனியில் எடுத்து வைத்து, வியூகங்கள் அமைக்க தனி ஊழியர்கள் தற்போது ஒவ்வொரு அணியிலும் உண்டு.

மேலும் இன்னும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, அணியிலுள்ள ஒவ்வொரு வீரரின் மனநிலையைச் சிறப்பாக வைத்திருப்பதற்கான, மனநல கட்டுப்பாட்டு பயிற்சியாளர்களும் அணிக்குள் கொண்டுவரப்பட்டார்கள். கிரிக்கெட் விளையாட்டில் கிரிக்கெட்டிற்கான அடிப்படைத் திறமைகள் எவ்வளவு முக்கியமோ, அதேயளவில் மனநிலை சிறப்பாகவும் உறுதியாகவும் இருப்பது மிக முக்கியம். கிரிக்கெட் என்பதே யார் யார் மனதைச் சரியாய் படிக்கிறார்கள் என்பதுதான்!

இந்திய அணிக்கு இப்படியான மனநல கட்டுப்பாட்டு பயிற்சியாளர்கள் என்பது புதிதானது ஒன்றில்லை. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிபோட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் செளரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் புகழ் பெற்ற விளையாட்டு உளவியலாளர் சாண்டி கார்சன் என்பவர் இருந்தார். அப்போது அவர் இந்திய அணிக்குள் உருவாக்கிய “இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை” என்கிற அணுகுமுறை மிகப் பிரசித்தம்.

இதற்கடுத்து கிரேக் சாப்பல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாராக வந்த பொழுது, விளையாட்டுஉளவியல் பயிற்சியாளர் ரூடி வெப்ஸ்டரை அழைத்து வந்தார். ஆனால் இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்பு, இந்த முறையில் அல்லாமல், இந்திய அணி பழைய முறைக்கே திரும்பியது.

இதற்கு நடுவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த விளையாட்டு உளவியல் பயிற்சியாளர் மற்றும் மனநலக் கட்டுப்பாட்டாளர் பேடி அப்

டன், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற காலக்கட்டத்தில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில் இருந்தார்.

இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டுதான் ஐசிசி நடத்தும் தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக தோல்வி முகம்தான் கண்டு வருகிறது. கடந்த 2021 டி20 உலகக்கோப்பையின் போது இந்திய அணிக்கு மென்டராக மகேந்திர சிங் தோனியை இந்திய அணி நிர்வாகம் அனுப்பி வைத்தது. ஆனால் இந்தத் திட்டம் பலனளிக்கவில்லை!

எனவே இந்த முறை 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் மனநல கட்டுப்பாட்டு ஆலோசராகச் செயல்பட்ட பேடி அப்டனை மீண்டும் அதே பொறுப்பில் இந்திய அணி நிர்வாகம் நியமித்திருக்கிறது. இவர் வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான டி20 தொடரில் இருந்து பணியாற்ற இருக்கிறார். இவர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டோடு நல்ல நட்பில் இருப்பவர்!

பேடி அப்டன் எழுதியுள்ள “தி பேர்புட் கோச்” புத்தகத்தை ராகுல் டிராவிட் வெளியிட்டுள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள பேடி அப்டன் அதில் “1995 ஆம் ஆண்டு நான் முதலாக பயிற்சியாளர் பொறுப்பை தொடங்கியதிலிருந்து எனது இந்தப் பயணத்தில் டிராவிட் ஒரு முக்கியப் பங்கை கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து கிரிக்கெட் மற்றும் வாழ்க்கைத் தொடர்பாக பல நல்ல விசயங்களைத் கற்றிருக்கிறேன். அதை இந்தப் புத்தகத்திலும் எழுதி இருக்கிறேன். நன்றி ராகுல் டிராவிட்” என்று தெரிவித்தார்.

தற்போது இந்திய அணியின் மனநல கட்டுப்பாட்டு ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ள பாடி அப்டனை பற்றி கூறியுள்ள டிராவிட் அதில் “பேடி அப்டன் நல்ல சிந்தனை தலைவர். அவர் கிரிக்கெட் மற்றும் வாழ்க்கைக்குத் தனித்துவமான, பொருத்தமான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறார்” என்று பாராட்டி இருக்கிறார்!