“விராட் கோலி சதம் அடித்தால் மட்டும் அது பலவீனமான அணி அது மொட்டை விக்கெட்டா? – விராட் கோலிக்கு ஆதரவாக குதித்த சல்மான் பட்!

0
2070
Butt

தற்போதைய கிரிக்கெட் உலகத்தில் மூன்று வடிவத்திலும் தொடர்ச்சியான மிகச் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை கொண்டு இருக்கும் ஒரே ஒரு வீரர் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலிதான்!

இப்படியான பேட்டிங் திறமையை கொண்ட விராட் கோலிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பெரிய சரிவு இருந்தது. ஆயிரம் நாட்களைக் கடந்து சதங்கள் எதையும் அடிக்காமல் அவர் இருந்தார். இந்த சத வறட்சிக்கு கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கடந்த ஆண்டில் இறுதியில் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் சதம் கண்டார். தற்பொழுது உள்நாட்டில் இலங்கை அணிக்கு எதிராக நடந்து வரும் ஒரு நாள் தொடரில் 80 பந்துகளில் சதம் கண்டார்.

விராட் கோலியின் இந்த சதங்களை எல்லாம் சிறிய அணிகளுக்கு எதிராக வந்தது மற்றும் பேட்டிங் செய்ய எளிதான தட்டையான ஆடுகளங்களில் வந்தது என்கின்ற ஒரு விமர்சனத்தை ஒரு கும்பல் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் முன்வைத்துக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சல்மான் பட் தற்போது களத்தில் குதித்து இருக்கிறார்!

விராட் கோலியின் சதங்களை மலிவாக சமூக வலைதளத்தில் பேசும் கும்பலை நோக்கி சல்மான் பட் பேசும்போது
” ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தார். அவர்கள் வலுவான பந்துவீச்சு தாக்குதலை கொண்டுள்ள ஒரு அணி. ஆப்கானிஸ்தான் அணி சிறிய அணி என்றால் அவர்களுக்கு எதிராக டி20 கிரிக்கெட் எத்தனை பேர் சதம் அடித்து இருக்கிறார்கள்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” விராட் கோலி சதம் அடிக்கும் பொழுதெல்லாம் எதிரணி பலவீனமானது, ஆடுகளம் தட்டையானது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அவர் அதை 73 முறை செய்திருக்கிறார். சிலர் தொடர்ந்து மலிவாக ஏன் இப்படி செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. விராட் கோலி ஒரு கிரிக்கெட் மேதை” என்று புகழ்ந்திருக்கிறார்!

இதற்கு உதாரணம் குறிப்பிட்டு பேசிய அவர் ” விராட் கோலி கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டம் மிகவும் சிறப்பானது. இது போன்ற பாணியில் விளையாடுவது எப்போதும் எளிதான ஒன்று கிடையாது. குறிப்பாக நீங்கள் கொஞ்சம் பேட்டிங் ஃபார்மில் இல்லாத பொழுது. இது போன்ற ஆட்டங்கள் ஒரு வீரரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்” என்று தெரிவித்திருக்கிறார்!