டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக கேமரா அணிந்து பீல்டிங் செய்யவுள்ள ஓல்லி போப் – காரணம் இதுதான்

0
583
Ollie Pope

சமீபத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தது நியூசிலாந்து அணி. இந்தத் தொடரில் மூன்று ஆட்டங்களிலும் இலக்கை நோக்கி நான்காவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து வேறொரு பரிணாமத்தில் அதிரடியாய் விளையாடி வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் இலக்கை ஜோ ரூட் சதமடித்து வெற்றிக்கரமாக துரத்த, இரண்டாவது டெஸ்டில் வேகமான சதத்தோடு ஜானி பேர்ஸ்டோ துரத்தினார், மூன்றாவது போட்டியில் ஒலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ மூவரும் வெற்றிக்கரமாகத் துரத்தினார்கள்.

நியூசிலாந்து அணி தொடர் முழுவதும் புது பந்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டும், பேட்ஸ்மேன்கள் டேரில் மிட்ச்செல், டாம் ப்ளூன்டால் ஜோடி மிகச்சிறப்பாய் விளையாடியுமே, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஒலி போப், பென் ஸ்டோக்ஸ் அதையெல்லாம் தங்களின் அதிரடியான பேட்டிங் மூலம் நொறுக்கி, நியூசாலாந்து அணியை 3-0 என வொய்ட் வாஷ் செய்து அனுப்பி இருக்கிறார்கள்.

- Advertisement -

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த அதிரடி முன்னாள் வீரரும், கேப்டனுமான பிரன்டன் மெக்கல்லம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாறாராகப் பொறுப்பேற்றதில் இருந்து, இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டி அணுகுமுறை முற்றிலும் தாக்குதல் பாணிக்கு மாறியிருக்கிறது. உதாரணமாக நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்டில் 299 ரன் இலக்கை ஒருநாள் போட்டி போல 50 ஓவர்களில் அடித்து அசத்தியது. ஜானி பேர்ஸ்டோ இந்தத் தொடரில் இரண்டு சதங்கள், ஒரு அரைசதம் அடித்திருக்கிறார், ஆனால் இதைவிட முக்கியம் இதெல்லாம் நூறு ஸ்ட்ரைக்ரேட்டிற்கு மேல் வந்திருப்பதுதான்!

இங்கிலாந்து டெஸ்ட் அணி இப்படி அதிரடி பாணியில் விஸ்வரூபமெடுத்து நிற்க, கடந்த வருடம் விளையாட முடியாது போன ஒரு டெஸ்ட் போட்டியில், தற்போது இந்திய அணி பர்மிங்ஹாம் எட்பஜ்டஸ்டனில் இந்திய அணி மோத உள்ளது. இந்தப் போட்டி நாளை ஆரம்பித்து 5 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த வருடத்தில் இங்கிலாந்து அணி பலகீனமாய் இருந்த பொழுது விளையாட தவறிய டெஸ்டில், இங்கிலாந்து அசுரபலமாய் இருக்கும் பொழுது இந்திய அணி விளையாடுவது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இந்த டெஸ்டில் இதுவரை எந்த டெஸ்ட் போட்டியிலும் நடக்காத ஒரு புதிய நிகழ்வு அரங்கேற உள்ளது. என்னவென்றால்; ஷார்ட்-லெக் பீல்டிங் பொசிசனில் இங்கிலாந்து அணிக்காக பீல்ட் செய்யப்போகும் ஒலி போப்பின் தலையின் மேற்புறத்தில் கேமரா பொருத்தப்பட உள்ளது. பேட்ஸ்மேனுக்கு அருகில் அவரை ஒட்டி அருகில் லெப்ட் சைடில் நிற்கும் பீல்டிங் பொசிசன்தான் ஷார்ட்-லெக் என்பதாகும். இந்த பீல்டரின் தலையில் கேமரா பொருத்துவது, பேட்ஸ்மேன் ஆடும் விதம் மற்றும் கேட்ச், ஸ்டம்ப்பிங், எல்.பி.டபிள்யூ அவுட்களில் கூட சந்தேகங்கள் இருந்தால் தெளிவுக்காகப் பார்க்க முடியும்!

- Advertisement -