ஒடிசா வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு

0
652
Subranshu Senapati Called for CSK Trails

இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது கிடையாது. அந்த வரலாற்றை மாற்ற தற்போது கோலி தலைமையிலான இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் என்னதான் இந்த மாதம் தொடங்க இருந்தாலும் அதை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது ஐபிஎல் ஏலம் குறித்து தான். ஒவ்வொரு அணிகளும் தங்கள் யார் யாரை தக்க வைக்கப் போகிறோம் என்று அறிவித்து விட்ட நிலையில் தற்போது ஏலம் ஒன்று தான் நடக்க வேண்டியுள்ளது. எந்தெந்த வீரர்களை அணிக்கு வாங்க வேண்டும் என்பதில் தற்போது 10 அணிகளும் கவனம் செலுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரிசாவை சேர்ந்த சுப்ரன்ஷு சேனாபதி என்னும் வீரரை அழைத்து அவரின் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கொடுத்துள்ளது. இதை ஒடிசா கிரிக்கெட் அசோசியேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. சேனாபதி வலதுகை பேட்டிங் வீரர் ஆவார். அவ்வப்போது அணிக்கு தேவைப்பட்டால் மித வேகப்பந்து வீச்சும் இவர் கைவசம் உண்டு. கெயோஞ்சிஹர் என்ற ஊரில் பிறந்தவர் இவர். இதுவரை 34 முதல் தர போட்டிகளும், 32 லிஸ்ட்-ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 26 டி20 போட்டிகளில் விளையாடி அசத்தியுள்ளார் இவர்.

24 டி20 இன்னிங்சில் 637 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 122.26 ஆகும். 28.95 என்ற சராசரியுடன் டி20 போட்டிகளில் ஆடியுள்ள இவரது அதிகபட்ச ஸ்கோர் 67 ஆகும். இதுவரை 50 பவுண்டரிகளும் 24 சிக்சர்களையும் இவர் விளாசியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் ஒரு சதம் 2 அரைசதம் உட்பட 275 ரன்கள் குவித்துள்ளார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் 138 ரன்களை 5 போட்டிகளில் எடுத்துள்ளார்.

பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டு காலமாக இருந்து வந்துள்ளது. அதெல்லாம் மாற்றும் விதமாக இந்த இளம் வீரருக்கு சென்னை அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்