“மேன் ஆப் தி மேட்ச் – மழை” 2வது போட்டி முடிவுக்கு வந்தது!

0
1860

மழை இடைவிடாமல் பெய்ததால் 2வது ஒருநாள் போட்டி முடித்துக்கொள்ளப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது நியூசிலாந்து அணி.

பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் தவான் இருவரும் களம் கண்டனர். முதல் ஒருநாள் போட்டியில் அரைசதமடித்த இருவரும் மீண்டும் ஒருமுறை நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முற்பட்டனர்.

4.5 ஓவர்களில் இந்திய அணி 22 ரன்கள் எடுத்திருந்தது. கில் 19 ரன்களுடனும் தவான் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது திடீரென போட்டியில் மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே தடைப்பட்டது.

ஹாமில்டன் மைதானத்தின் வானிலை ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது. மழை வருவதும் நிற்பதுமாக சுமார் 4 மணிநேரம் ஆட்டம் காட்டியது.

ஒரு வழியாக, இந்திய நேரப்படி சுமார் 11.30 மணியளவில் மீண்டும் ஆட்டம் துவங்கியது. கில் மற்றும் தவான் களமிறங்கினர்.

8 பந்துகளில் 2 ரன்கள் அடித்திருந்த தவான், 3 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்ததாக உள்ளே வந்த சூரியகுமார் வந்த வேகத்திலேயே அதிரடியை வெளிப்படுத்த துவங்கினார்.

சூரியகுமார் யாதவ் 3 சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் உட்பட 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார். மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் ஒரு சிக்சர் மற்றும் நான்கு பவுண்டரிகள் உட்பட 42 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தனர்.

12.5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழையின் வேகம் அதிகரித்தது. உடனடியாக கவர்கள் உள்ளே எடுத்து வரப்பட்டது. வீரர்களும் பெவிலியன் நோக்கி ஓடத்துவங்கினர்.

இந்திய நேரப்படி மதியம் 12.45 வரை பார்த்த நடுவர்கள், அதன்பிறகும் இடைவிடாமல் மழை பெய்ததால் போட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். இதனால் இரண்டாவது ஒருநாள் போட்டி முடிவின்றி ரத்தானது.

இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி 3வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்யவில்லை என்றால், உலக சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்திக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.