கேன் வில்லியம்சன் போன மேட்ச் சதம், இந்த மேட்ச் இரட்டை சதம்.. ஒரே இன்னிங்சில் 2 பேர் இரட்டை சதம்.. வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 580 ரன்கள் அடித்த நியூசிலாந்து!

0
1059

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்திருக்கின்றனர். 580 ரன்கள் டிக்ளர் செய்தது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்திற்கு சென்றிருக்கும் இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி, பரபரப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் ஐந்தாவது நாளில் கடைசி பந்து வரை சென்றது. கடைசியாக, ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனையடுத்து வெலிங்டன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 17ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது இலங்கை அணி.

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் டாம் லேத்தம் 21 ரன்களுக்கும், கான்வெ 78 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 118 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

முதல் நாள் ஆட்டத்தின் போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக வெறும் 48 ஓவர்களிலேயே ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை நியூசிலாந்து அணி அடித்திருந்தது.

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த பார்மை இப்போட்டியிலும் தொடர்ந்தார் கேன் வில்லியம்சன்.

மிகச்சிறப்பாக விளையாடி வந்த இவர் சதத்தை பூர்த்தி செய்த பிறகு, இன்னும் வேகமாக அடிக்க ஆரம்பித்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த ஹென்றி நிக்கோல்ஸ் மறுமுனையில் சதமடித்து இன்னும் வலுவான நிலையில் இருந்தார். இந்த ஜோடியின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இலங்கை அணியினர் கடுமையாக போராடினார்.

கடைசி வரை நிற்காத கேன் வில்லியம்சன் டெஸ்ட் அரங்கில் தனது ஆறாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் 23 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 215 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 373 ரன்கள் சேர்த்தது.

மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த ஹென்றி நிக்கோல்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார். இதில் 15 பவுண்டர்கள் நான்கு சிக்ஸர்கள் அடங்கும். இவர் இரட்டை சதத்தை எட்டியபோது, டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி. முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 580 ரன்கள் அடித்திருந்தது.

ஒரே இன்னிங்சில் கேன் வில்லியம்சன்(215), ஹென்றி நிக்கோல்ஸ்(200*) இருவரும் இரட்டை சதமடித்து புதிய வரலாறு படைத்தனர்.

அதன் பிறகு முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி, இரண்டாம் நாள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் அடித்திருந்தது. களத்தில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் கேப்டன் கருணரத்னே இருவரும் நிற்கின்றனர். 554 ரன்கள் பின்தங்கியுள்ளது.