சச்சின் இல்லை, கோலி இல்லை ; நான் என் வாழ்கையில் பார்த்த சிறந்த பேட்ஸ்மேன் இவர் தான் – உஸ்மான் கவாஜா

0
2957
Usman Khawaja

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்தின் மீது 2009-ல் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலிருந்து, உலக கிரிக்கெட் நாடுகள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதைத் தவிர்த்து வந்தன.

கடந்த 2019-ஆம் ஆண்டு நியூசிலாந்து தன் இரண்டாம்தர அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்பியதோடு, போட்டி நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள், பாதுகாப்பு காரணங்களைக் கூறி நாடு திரும்பியது கிரிக்கெட் தாண்டி அரசியலாகவும் பெருத்த சர்ச்சையானது. நியூசிலாந்தைத் தொடர்ந்து இங்கிலாந்தும் தன் பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை இரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இப்படியான நிலையில்தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அளித்திருந்த வாக்குறுதியின்படி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள், ஒரு ட்வெண்ட்டி 20 கொண்ட தொடர்களில், பாகிஸ்தானிற்குப் சுற்றுப்பயணம் செய்து, மார்ச் முதல் வாரத்திலிருந்து விளையாடி வருகிறது.

இதில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்டில் 390 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 90 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மூன்றாவது டெஸ்டில் வார்னர், லபுக்சேனை அப்ரிடி விரைவில் வெளியேற்ற, பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய உஸ்மான் கவாஜாவோடு ஸ்டீவன் ஸ்மித் இணைந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார்கள்.

- Advertisement -

வழக்கம் போல் இதிலும் அரைசதமடித்த ஸ்டீவன் ஸ்மித் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் தொடரில் ஸ்மித்திற்கு இது மூன்றாவது அரைசதம். இந்தத் தொடருக்கு பேட்டிங்கிற்கு அதிகபட்ச சாதகமாக உருவாக்கப்பட்ட ஆடுகளங்கள் ஒருபுறம் சர்ச்சையாக, இப்படியான பேட்டிங் ப்ரன்ட்லி விக்கெட்டிலும் ஸ்மித் சதம் அடிக்காததும் முணுமுணுப்பானது. கடந்த 14 மாதங்களாக ஸ்மித்திற்கு சதங்கள் வரவில்லை. விராட் கோலி சதங்கள் வராமல் இங்கு எப்படியான கேள்விகளை, விமர்சனங்களை எதிர்கொள்கிறாரோ அதேபோல் ஸ்டீவன் ஸ்மித்திற்கும் ஆரம்பித்துள்ளது!

இதுக்குறித்து அவரது அணியின் சக ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவிடம் கேட்ட பொழுது, “இப்படியான கேள்விகள் வேடிக்கையானது” என்று கூறிய கவாஜா மேலும் தன் கருத்துக்களைப் பகிர்ந்தார்.

“அவர் சதம் அடிக்கவில்லைதான். ஆனால் 70, 80 ரன்களை வெகு எளிதாய் அடிக்கிறார். நான் உறுதியாகக் கூறுகிறேன், அவர் ஒரு பெரிய ஸ்கோரை அடித்துவிட்டால், அடுத்து நிறைய பெரிய ஸ்கோர்களை குவிப்பார்” என்றார்.

மேலும் அவர் “சில விசயங்களில் அவருக்கு விரக்தி இருக்கலாம். என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால், நான் பார்த்ததில், என் காலத்தில், அவர்தான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவர் தன் டெஸ்ட் கேரியரின் மொத்த சராசரியாக 60 வைத்துள்ளார். அவர் எடுத்துள்ள ரன்கள் குறித்து நான் பெரிய பிரமிப்பில்தான் இருக்கிறேன்” என்றார்!