குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நம்பர் 3ல் நான் பேட்டிங் செய்வதற்கு இதுதான் காரணம் – கேப்டன் ஹர்திக் பாண்டியா வெளிப்படைப் பேச்சு

0
112
Hardik Pandya Gujarat Titans

2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏலம் முடிந்தப் பின் அனைத்து அணிகளைக் காட்டிலும் சற்று பலவீனமான அணியாக தென்பட்டது. மேலும் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் ஆரம்பத்திலேயே தொடரை விட்டு விலகினார். இது குஜராத் அணிக்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தியது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தக் கூடிய விக்கெட் கீப்பர் இல்லாமலும் பரிதவித்தது.

ஆனால் அனைத்து பிரச்சனைகளையும் பொறுப்பாக சீர்ப்படுத்தினார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. தற்போது குஜராத் அணி 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கூடிய விரைவில் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதிப் பெற்றுவிடும். குஜராத் அணியின் தொடர் வெற்றிகளுக்கு அவர்களது விடா முயற்சி மற்றும் இறுதி வரை போராடும் மனவலிமை தான் காரணம்.

தன்னுடைய மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் தன் இடத்தை இழந்த ஹர்திக் பாண்டியா, தற்போது அதை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் ஈடுபட்டுள்ளார். எப்போதும் பினிஷராக களமிறங்கும் அவர் இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நம்பர் 3இல் விளையாடுகிறார். 6 போட்டிகளில் 295 ரன்கள் சேர்த்ததோடு தொடர்ந்து 3 போட்டிகளில் அரை சதமு‍ம் விளாசி அதிரடி காட்டி வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “ நம்பர் 3இல் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது என் கனவு. 2016ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சில போட்டிகளில் டாப் ஆர்டரில் விளையாடினேன். இருந்தும் என்னால் பெரிதாக சோபிக்க இயலவில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் வெல்வென் ” என்றார்.

அதோடு, “ ஷுப்மன் கில்லின் விக்கெட் பொறுத்து என்னுடைய பணி மாறும். அவர் களத்தில் இருந்தால் நான் ஒரு மாதிரியாகவும் அவர் இல்லாத போது வேறொரு மாதிரியும் ஆடுவேன். கில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினால், நான் களத்தில் ஷுப்மன் கில்லாக செயல்படுவேன். நான் நன்றாக பேட்டிங் செய்கிறேன். என் ஃபார்ம்மை நினைக்கும் போது எனக்கு சந்தோசமாக உள்ளது. பெரிய ரிஸ்க் இல்லாமால் சிறந்த கிரிக்கெட் ஷாட்ஸ் ஆட விரும்புகிறேன் ” எனக் கூறினார். பேட்டிங் மட்டுமில்லாமல் பவுலிங்கிலும் ஹர்திக் பாண்டியா தன் திறனை நிரூபித்து வருகிறார். ஆகையால் விரைவில் அவரை இந்திய அணியில் பார்க்கலாம்.