சதம் அடிக்காதது பற்றி கவலை இல்லை; போட்டி என்ன ஆகும்? புஜாரா சிறப்பு பேட்டி!

0
343
Pujara

இந்திய அணி பங்களாதேஷ் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. முதலில் ஒரு நாள் போட்டி தொடரை முடித்துக் கொண்டு இன்று டெஸ்ட் போட்டி தொடரில் முதல் போட்டியில் விளையாடி வருகிறது!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேஎல் ராகுல், கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரது விக்கட்டுகளை 112 ரன்களுக்குள் இழந்துவிட்டது. இதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவானது.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் இணைந்து 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை மீட்டெடுத்தனர். இதில் புஜாரா கடைசி நேரத்தில் 90 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார்.

போட்டிக்கு பிறகு இது குறித்து பேசிய புஜாரா ” நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மூன்று இலக்க ரன்னை அடிக்க முடியாததில் எனக்கு வருத்தம் கிடையாது. நான் நன்றாக பேட்டிங் செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். நான் இதைத் தொடர்ந்தால் சதம் விரைவில் வரும். இந்த ஆட்டத்தில் முடிவு வரும் போல தான் தெரிகிறது” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” வேகப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் பொழுது கூட பவுன்ஸ் மாறி மாறி இருந்தது. மேலும் பந்துவீச்சாளர்கள் சோர்வடைந்து விட்டால் தொடர்ந்து அவர்களால் சரியாக வீசிக் கொண்டிருக்க முடியாது. கூக்கபுரா பந்துகளைப் பொறுத்தவரையில் முதல் 30 ஓவர்கள் பொறுமையாக அணுகுவது முக்கியமானது. அந்தக் கட்டத்தை நீங்கள் கடந்து விட்டால் ஆட்டத்தை அணுகுவது கொஞ்சம் எளிதாக இருக்கும். ஆனால் கவனம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்!

சுழற் பந்துவீச்சு குறித்து பேசிய புஜாரா
” எல்லா பந்துகளும் திரும்பவில்லை ஏதாவது சில பந்துகள்தான் திரும்புகிறது. இதுதான் ஆபத்தான விஷயம். பந்து தாழ்வாகவோ, திடீரென்று திரும்பியோ எல் பி.டபிள்யு இல்லை போல்ட் மூலம் ஆட்டம் இழக்க செய்துவிடும். இந்த ஆடுகளத்தில் நிம்மதியாக பேட்டிங் செய்வது என்பது முடியாத காரியம் ” என்று கூறினார்!