எந்த விஐபியா இருந்தாலும் அனுமதி கிடையாது! – டெல்லி கிரிக்கெட் சங்க இயக்குனர் திட்டவட்டம்!

0
1199

இந்திய அணியின் ஸ்டார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் கார் விபத்தில் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் . இவருக்கு முதல் கட்ட சிகிச்சைகள் முடிந்த நிலையில் நலமுடன் இருப்பதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ மருத்துவ குழு அறிவித்துள்ளது.

விபத்திற்கு பின் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பண்டிற்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் நேற்று பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது . இதனை அடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் ரிஷப் பண்ட் நன்றாக முன்னேறி வருவதாகவும் நாளுக்கு நாள் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள் உடன் பிசிசிஐ யின் மருத்துவ குழு நிபுணர்களும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழு நிபுணர்களும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் காயங்களின் தன்மை குறித்தும் ஆலோசித்து வருகின்றனர் . முதலில் ஒரு வருடத்திற்கு அவர் விளையாட முடியாத நிலை வரலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதால் மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்குள் அவர் கிரிக்கெட் பயிற்சி தொடங்கலாம் என்று எதிர்பார்ப்பதாக மருத்துவ குழு அறிவித்துள்ளது .

இந்நிலையில் இன்று மருத்துவர்களை சந்தித்து ரிஷப் பண்டின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனர் ஷியாம் சர்மா “அவரைப் பார்க்கிறேன் என்று அவருடன் அமர்ந்து பேசி யாரும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் தற்போது தான் அவர் காயத்தில் இருந்து குணம் அடைந்து வருவதால் நோய்க்கிருமிகளின் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது இதன் காரணமாக வெளி பார்வையாளர்கள் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் இது டெல்லி கிரிக்கெட் சங்கத்திலிருந்து அதிகாரப்பூர்வமாகவே அறிவிப்பு செய்கின்றோம் எந்த ஒரு விஐபி யாக இருந்தாலும் ரிசப் பண்டை பார்ப்பதற்கு சில காலங்களுக்கு அவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். காயங்களின் தீவிரத் தன்மை காரணமாக திரும்பி தொற்று ஏற்படலாம் இதற்காகவே வெளி பார்வையாளர்கள் யாரையும் பார்ப்பதற்கும் அவருடன் அமர்ந்து பேசுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் ஷ்யாம் சர்மா.

- Advertisement -

ரிஷப் பண்ட் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்விக்கு அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை இந்த மருத்துவமனையில் தான் தொடர்ந்து சிகிச்சையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சில காயங்களுக்காக பிசிசிஐ யின் மருத்துவ குழுவை ஆலோசித்து விட்டு தேவை இருப்பின் அவரை டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றுவோம் என்று கூறினார்