ரிஸ்வான்- பாபர்- விராட் கோலி கிடையாது; இவர்தான் டி20 நம்பர்-1 பேட்ஸ்மேன் – வெய்ன் பர்னல் பிரம்மிப்பு!

0
2577
Sky

இந்திய வெள்ளை பந்து அணிக்கு தற்காலத்தில் கிடைத்திருக்கும் இரண்டு பெரிய நம்பிக்கை, ஒன்று விராட்கோலி மீண்டும் தன் சிறப்பான பேட்டிங் ஃபார்முக்கு மூன்று வருடங்கள் கழித்து திரும்பி இருப்பது. அடுத்து யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தாக்கம் மிகுந்த ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் ஆடுவது!

இவர்கள் இரண்டுபேரும் இந்திய வெள்ளைப் பந்து அணியில் தற்போது மிக முக்கியமான ஜோடியாக மாறி இருக்கிறார்கள். துவக்க ஜோடி ஆட்டமிழந்து இவர்கள் இருவரும் சேரும் பொழுது, விராட் கோலி ஒரு முனையில் மிகச்சரியான ஒத்துழைப்பை தந்து, ஒரு ரன்களை தட்டி, சூரியகுமாரை அதிக நேரம் பேட்டிங் முனையில் நிறுத்துகிறார். இதனால் ஒரு ஓவரில் இரண்டு முறை பேட்டிங் முனைக்கு வந்து விடும் சூரியகுமார் எப்படியும் அந்த ஓவரை வெற்றிகரமான ஓவராக தன் திறமையால் மாற்றிவிடுகிறார். அதேசமயத்தில் சூரியகுமார் இடமிருந்து பவுண்டரிகள் வராமலிருந்தால், அந்த அழுத்தம் அவரை பாதிக்காத அளவுக்கு விராட் கோலி பவுண்டரிகள் ஆடி அவரை பாதுகாத்துக் கொள்கிறார்.

- Advertisement -

இப்படி மிக இணக்கமாக மதிநுட்பமாக புரிதலோடு அதிரடியாக இந்த ஜோடி விளையாடுவதால், எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு இவர்கள் நிலைத்துவிட்டால் பிரிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் யூனிட் பலமாய் தெரிவதற்கு மிக முக்கிய காரணம், துவக்க ஜோடி தரும் ரன்களையும், இறுதிக்கட்ட ஜோடி தரும் ரன்களையும், நடுவரிசையில் வெற்றிகரமான பாலமாக இருந்து இந்த ஜோடி இணைப்பதால்தான் . உறுதியாகக் கூறலாம் இந்த ஜோடி சில ஆண்டுகளுக்கு டி20 போட்டிகளில் ஆட்டத்தில் தாக்கத்தைச் செலுத்தும் ஒரு சிறந்த ஜோடியாக இருக்கும் என்று.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் சில தாக்கம் மிகுந்த ஆட்டங்களை சூரியகுமார் ஆடியதால், அவரை மும்பை அணி வாங்கியது. அதற்குப் பிறகு அவரது ஆட்டம் மிகவும் அபாரமாக மாறியது. மும்பை அணிக்கான அவரது சிறப்பான ஆட்டம் அவரை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் அவரது தைரியமான 360 டிகிரி பேட்டிங்கை பார்த்தபொழுது, எல்லோரும் அவரை இந்திய ஏபி டிவிலியர்ஸ் என்று அழைத்தார்கள். ஆனால் பேட்டிங்கில் நான்காவதாக வந்து, ஒரு ஆண்டில் இந்திய அணிக்காக டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்ததோடு, 573 பந்துகளில் சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்து, குறைந்த பந்துகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதன் மூலம் அவர் ஏபி டிவிலியர்சையும் டி20 கிரிக்கெட்டில் தாண்டி இருக்கிறார் என்பதுதான் செய்தி!

தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்துள்ள 2 டி20 போட்டிகளிலும் மிக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார் சூரியகுமார் யாதவ். அவருக்கு எதிராக பந்து வீசிய தென்ஆப்பிரிக்க அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னல் சூரியகுமார் யாதவ் பற்றி வியந்து புகழ்ந்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் பற்றி அவர் கூறும் பொழுது ” என்னைப் பொருத்தவரை சூர்யகுமார் யாதவ்தான் தற்போது மிகச்சிறந்த டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன். அவர் 360 டிகிரி பேட்டிங்கை கொண்டுள்ளார். இதனால் அவரை பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம்” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“இது பந்தில் கவனம் செலுத்தும் விஷயம். அவர் மிகச்சிறப்பாக இதைச் செய்வதால், அவர் எல்லா வகையான ஷாட்களையும் ஆட அனுமதிக்கப்படுகிறார். இது மட்டுமில்லாமல் அவர் சில நேரங்களில் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கிறார். நான் அவரது ஆட்டத்தை கடந்த இரண்டு மாதங்களாக பார்த்து ரசித்து வருகிறேன். அவர் மிக அருமையாக பேட்டிங் செய்கிறார் ” என்று வியந்து பாராட்டி புகழ்ந்து கூறியுள்ளார்!