ஷிகர் தவானை மதிக்கலை ; அதை ஷிகர் தவானும் மதிக்கலை ; இந்திய முன்னாள் பயிற்சியாளர் குற்றச்சாட்டு!

0
653
Shikardhawan

டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டில் 40 ரன்கள் ஆவரேஜ் வைத்திருந்தும் ஒதுக்கப்பட்ட ஒரு துவக்க ஆட்டக்காரர் உண்டென்றால் அது இந்திய அணியின் இடதுகை துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்தான்.

அதேபோல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 400 ரன்களுக்கு மேல் குவித்தும் இந்திய டி20 அணியில் இடம் மறுக்கப்பட்ட ஒரு வீரர் உண்டென்றால் அது ஷிகர் தவான்தான்!

தற்போதைய இந்திய அணியில் அனுபவமிக்க ஒரு வீரரான இவர், ஒரு ஆட்டத்தை எப்படி தொடங்க வேண்டும், எப்படி நகர்த்த வேண்டும், எப்படிக் கொண்டு போய் முடிக்க வேண்டும் என்பதில் மிகப்பெரிய வல்லவர். அதேபோல் ஃபீல்டர்களுக்கு இடையில் பந்தைச் செலுத்துவதில் கில்லாடி பேட்ஸ்மேன். அதேபோல் தேவைக்குத் தகுந்தபடி பந்துவீச்சாளர்களை பந்துவீச வைப்பதில் கில்லாடி பேட்ஸ்மேன்.

இப்போது இவரை இந்திய அணி நிர்வாகம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறது. 35 வயதான ஷிகர் தவான் இதுவரை இந்திய அணிக்காக 158 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 6647 ரன்களை, 45 ஆவரேஜ் மற்றும் 17 சதங்கள், 38 அரைச் சதங்களுடன் அடித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் ஷிகர் தவானுக்கு அளிக்கப்பட்ட மரியாதை பற்றி இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் மிகவும் வருத்தத்துடன் தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது ” ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், ஒருநாள் போட்டி வீரராக ஷிகர் தவானுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. இந்திய அணிக்காக விளையாடிய இடதுகை துவக்க ஆட்டக்காரர்கள் கங்குலி மற்றும் கம்பீருக்கு அடுத்து யார் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? ஷிகர் தவான் தான் இருக்கிறார். இந்த வடிவ கிரிக்கெட்டில் அவரின் நிலைத்தன்மை மிகவும் தனித்துவமானது ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அவர் மிகவும் மகிழ்ச்சியாக எதையும் அணுகும் அதிர்ஷ்டசாலி. கடந்த காலத்தில் நடந்த பல விஷயங்களை நினைத்து அவர் வருந்துவது கிடையாது. அதுதான் அவரது மனநிலை அதுதான் அவரது வாழ்க்கை பற்றிய பார்வை. அவர் கையில் இருப்பதை மதிக்கிறார். அவர் கையில் இப்பொழுது ஒருநாள் கிரிக்கெட் இருக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்து அவர் ஒரு சிறந்த ஆளுமையாக, நல்ல குணாதிசயம் மற்றும் கவர்ச்சியை கொண்டுள்ளார் ” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.