முக்கியமான கடைசி 5 ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை ; சென்னை அணியின் மந்தமான ஆட்டத்திற்கு இதுதான் காரணம் – தமிழக வீரர் ஜெகதீசன் கருத்து

0
1602
Narayan Jagadeeshan and Ruturaj Gaikwad

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில், தோனியின் சென்னை அணியும், ஹர்திக்கின் குஜராத் அணியும், மும்பையின் வான்கடேவில் மோதி வருகின்றன. இந்தப் போட்டி புள்ளி பட்டியலில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் குஜராத் அணி ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் முதல் அணியாய் நுழைந்துவிட்டது. சென்னை அணி ப்ளே-ஆப்ஸ் சுற்று வாய்ப்பை இரண்டாவது அணியாக இழந்திருக்கிறது.

சென்னை இந்த ஆட்டத்தில் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் லெக்-ஸ்பின்னர் பிரசாந்த் சோலங்கியையும், இலங்கையின் பாஸ்ட் பவுலர் மதிஷா பதிரணாவையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் இரு மாற்றங்களாக, சான்ட்னர், ஜெகதீசன் உள்ளே வந்திருக்கிறார்கள். பிராவோ, தீக்சனா, அம்பதி ராயுடு, உத்தப்பாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. குஜராத் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

போட்டியின் இரண்டாவது பாதியில் ஆடுகளம் மிக மெதுவாய் மாறும் என்று கூறி, சென்னை அணியின் கேப்டன் தோனி, டாஸை வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் கான்வோவை ஷமி ஆரம்பத்திலேயே வெளியேற்றினார். ஆனால் மற்றுமொரு துவக்க ஆட்டக்காரரான ருதுராஜ், மொயீன்அலி, ஜெகதீசனுன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைத்து, தானும் அரைசதமடித்தார். ஆனால் மிக மெதுவாக 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆடுகளத்திற்கு பந்து பேட்டிற்கு வரவே இல்லை. கடைசி ஐந்து ஓவர்களில் சென்னை அணி 24 ரன்களையே அடித்தது. இதில் ஒரு பவுண்டரி கூட இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் இந்த சீசனில் முதன் முதலாக வாய்ப்புப்பெற்ற ஜெகதீசன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 39 ரன் அடித்தார். அவர் இந்த ஆடுகளத்தைப் பற்றிக் கூறும்பொழுது “இந்த ஆடுகளத்தில் பந்து ஒட்டி வருவதோடு, இரண்டு விதமான வேகங்களில் வருகிறது. ஷாட்ஸ் ஆடுவது அவ்வளவு எளிதாய் இல்லை. நாங்கள் 15 முதல் 20 ரன்களை குறைவாக அடித்துவிட்டோம். வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் வேகத்தை மாற்றி, பேட்ஸ்மேன்களை சிரமப்படுத்தினார்கள். சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஆடுகளத்தில் சாதகம் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்!