வேண்டாம் 2007 உலக கோப்பை ஸ்கிரிப்ட் டிராவிட்.. “கோலி ரோஹித்தை விளையாடாதது ஏன்?” – இந்திய முன்னாள் வீரர் கேள்வி!

0
494
Dravid

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில், டி20 உலகக் கோப்பைக்காக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் மிகப்பெரிய பரிசோதனை முயற்சிகளை செய்தார்கள். அவர்கள் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாதவர்களாக இருந்தார்கள். டி20 உலகக் கோப்பையை மட்டுமே கவனத்தில் வைத்திருந்தார்கள்.

இதன் காரணமாக ஆசிய கோப்பையை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லாமலே இழந்து வெளியேறி வந்தது. அது அப்போது பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் டி20 உலகக்கோப்பை அரை இறுதியில் இந்திய அணி பந்துவீச்சில் எந்தவித போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் இங்கிலாந்து அணியிடம் சரணடைந்து தோற்றது. இது ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா மீதான விமர்சனத்தை கடுமையாக்கியது.

- Advertisement -

மேலும் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு முன்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், சரியான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்காமலும், மோசமாக விளையாடியும் இந்திய அணி தோற்றது. இதுவெல்லாம் சேர்த்து இந்திய அணி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் இடமும் பெரிய அளவில் சிதைத்து விட்டது.

தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 2007 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கேப்டனாக இருந்த பொழுது, அந்தத் தொடரில் இந்திய அணி முதல் சுற்றில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணி உடன் தோற்று வெளியேறியது.

அதற்கு முந்தைய உலகக் கோப்பையில் கங்குலி தலைமையில் துவக்க வீரராக வந்து சச்சின் மிகப்பெரிய ஆட்டத்தை விளையாடியிருந்தார். ஆனால் கேப்டன் ராகுல் டிராவிட் அவரை 2007 உலகக் கோப்பையில் நான்காவது இடத்திற்கு அனுப்பி பரிசோதித்து சொதப்பி, முதல் சுற்றோடு அணியை கூட்டிக்கொண்டு இந்தியா வந்தார். தற்பொழுது நடப்பதெல்லாம் அதேபோல் இருக்கிறது என்று ரசிகர்கள் வரை பேசி வருகிறார்கள்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது தொடர்பாக பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” இந்த போட்டியில் ரோகித்தும் கோலியும் ஏன் இல்லை என்று நீங்கள் யோசிக்கலாம். கடந்த போட்டியில் எதிரணி வேகமாக சரிந்து தோற்றதால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம். இதன் காரணமாக சில வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பரிசோதிக்கலாம் என்று நினைத்திருக்கலாம். இதுதான் காரணமாக இருந்திருக்குமா?

ஒருவேளை இதுதான் காரணம் என்றால், தற்போது 180 ரன்கள் இந்திய அணி சுருண்டத்தின் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணி அவர்களின் முக்கிய பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப்பை அடுத்த போட்டியில் விளையாட வேண்டாம் என்று ஓய்வெடுக்க சொல்லுமா? உலகக் கோப்பையை மிக அருகில் வைத்துக் கொண்டு, இப்படி பரிசோதனை முயற்சிகள் செய்வது சுத்தமாக சரியில்லாத ஒன்று.

இரண்டாவது விஷயம் என்னவென்றால் நிறைய போட்டிகள் நடக்கிறது எனவே வீரர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறப்படுகிறது. உண்மையில் தற்போது நிறைய போட்டிகள் நடந்திருக்கிறதா? ஐபிஎல் தொடருக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்து ஒரு மாதம் கழித்து வெஸ்ட் இண்டீஸ் வந்தார்கள். அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டிகள் இரண்டும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது. மொத்தமாக எடுத்துக் கொண்டால் இதற்கு முன்பு அவர்கள் ஒரு எட்டு நாட்கள் விளையாடி இருக்கிறார்கள்.

இந்த தொடர் முடிந்து விட்டால் ஆகஸ்ட் மாதம் முடிகின்ற வரையில் இந்தியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கிடையாது. தற்பொழுது இந்த போட்டியை விளையாடாவிட்டால் கடைசி போட்டியில் மட்டும் ஏன் விளையாட வேண்டும்? நீங்கள் நேராக இங்கிருந்து ஆசிய கோப்பை போட்டியில்தான் விளையாடுவீர்கள் என்றால், இதில் எங்கிருந்து வேலைப்பளு வருகிறது?” என்று அடுக்கடுக்காக கேட்டிருக்கிறார்!