நிதீஷ் ராணா அதிரடி சதம்; தொடர்ந்து அசத்தும் இந்திய இளம் வீரர்கள்!

0
106
Rana

இந்திய உள்நாட்டு டி20 லீக் தொடரான சையது முஷ்டாக் அலி தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் 5 பிரிவுகளில் முப்பத்தி எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியின் மூலமாக சாம்பியன் அணி கண்டறியப்படும்!

இன்று பி பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி பஞ்சாப் அணிகள் ஜெய்ப்பூர் மைதானத்தில் மோதின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மந்தீப் சிங் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

இதன்படி டெல்லி அணிக்கு துவக்கம் தர களமிறங்கிய துவக்க ஆட்டக்காரர்கள் அனுஜ் ராவத் மற்றும் தலால் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். அடுத்து 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் மற்றும் டெல்லி அணியின் கேப்டன் நிதீஷ் ரானா இருவரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

இளம் வீரர் யாஷ் துல் 45 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். கேப்டன் நிதிஷ் ராணா 61 பந்துகளில் 9 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அபிஷேக் ஷர்மா 33, அன்மொல்பிரீட் சிங் 64, கேப்டன் மந்தீப் சிங் 44 ஆகியோர் நல்ல பங்களிப்பை தந்தாலும் இலக்கை எட்ட முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் நிதீஷ் ராணா மூன்று ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக இவரே தேர்வு செய்யப்பட்டார்!

நேற்று தொடங்கிய சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் இதுவரை தேவ்தத் படிக்கல், ருதுராஜ், நிதீஷ் ராணா ஆகியோர் அதிரடி சதம் அடித்திருக்கிறார்கள். ரஜத் பட்டிதார் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடி அரை சதம் விளாசி இருக்கிறார்கள். வெங்கடேச ஐயர் இரண்டு அதிரடி அரை சதங்கள் விளாசியதோடு ஒரு ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அசத்தியிருக்கிறார்.