நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றில் விளையாடாமல் இங்கிலாந்து அணி சொந்த நாட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட சென்றது. இது ஐபிஎல் தொடரில் சில அணிகளைக் கடுமையாக பாதித்தது. இப்போது நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் பாதிப்படைய வைக்கும் விதமாக ஒரு விஷயத்தை வெளியிட்டிருக்கின்றன.
பொதுவாகவே ஐபிஎல் தொடர் நடக்கும் காலகட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் நாட்டிற்கு வந்து விளையாடும். அப்படி பாகிஸ்தான் வரும்பொழுது நியூசிலாந்து இரண்டாம் கட்ட அணி வந்து விளையாடும். இதனால் நியூசிலாந்து முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வந்தார்கள்.
தற்போது நியூசிலாந்து அணி உள்நாட்டில் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு விளையாடும் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதில் மார்ச் 16ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையில், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆனால் இந்த முறை பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு செல்கிறது. இதுதான் தற்போது ஐபிஎல் தொடருக்கும் சிஎஸ்கே அணிக்கும் சிக்கலை உருவாக்குகிறது.
ஏனென்றால் நியூசிலாந்து தங்களது சொந்த நாட்டில் இரண்டாம் கட்ட அணியை வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது சந்தேகம். முன்னணி வீரர்களை வைத்துதான் விளையாடுவார்கள். இந்த நிலையில் முன்னணி நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் குறைந்தது முதல் 10 நாட்கள் விளையாட முடியாமல் போகலாம்.
குறிப்பாக சிஎஸ்கே அணியில் தோனியின் விக்கெட் கீப்பிங் இடத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே முக்கியமானவராக இருக்கிறார். அவர் இடது கை ஆட்டக்காரர், துவக்க ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர், ஆசிய ஆடுகளங்களில் சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடும் வெளிநாட்டு வீரர் என்று மிக முக்கியமானவராக இருக்கிறார்.
இதையும் படிங்க : அஸ்வின் சமியை கூப்பிட்டு கம்பீர் பேசணும்.. இல்லனா எதிர்காலம் கஷ்டமாயிடும் – உலக கோப்பை வென்ற கோச் அறிவுரை
இதே போல வெளிநாட்டு சுழல் பந்துவீச்சு ஆள்ரவுண்டராக சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்தரா தேவைப்படுகிறார். அவர் மொயின் அலி இடத்தையும், சில நேரங்களில் ஜடேஜா இடத்தையும் நிரப்ப முடியும். மேலும் மூன்றாவது இடத்தில் வந்து அதிரடியாகவும் விளையாட முடியும். எனவே சிஎஸ்கே அணி இவர்களில் ஒருவரை தக்க வைக்கலாம், அல்லது இருவருமே வெளியில் விட்டு வாங்க முயற்சி செய்யலாம். இந்த காரணத்தால் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் ஐபிஎல் நேரத்தில் விளையாடுவது, சிஎஸ்கே அணிக்கு பிரச்சினையை உண்டாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது!