ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது.
இந்திய அணி உடன் அடைந்த தோல்வி மட்டும் இன்று இல்லாமல் இலங்கை அணியுடனும் தோல்வி அடைந்தது. இலங்கை அணியில் சில நட்சத்திர வீரர்கள் இடம்பெறாமல் இருந்தும் இந்த தோல்வி பாகிஸ்தானுக்கு வந்தது.
அப்போது இருந்து பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால் உலகக்கோப்பைத் தொடர் இருக்கின்ற காரணத்தினால் இது குறித்து மேற்கொண்டு பேசுவது அவசியமற்றது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது.
இந்த நிலையில் உலகக்கோப்பையை நியூசிலாந்து மற்றும் இலங்கை என இரண்டு சிறிய அணிகளுக்கு எதிராக வெற்றிகரமாக ஆரம்பித்த பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா என பெரிய அணிகளிடம் மோசமாக தோற்றது.
அதே சமயத்தில் அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் 282 ரன்கள் குவித்தும் கூட தோல்வி அடைந்ததோடு, அந்த அணியின் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியது. இது தற்பொழுது கடுமையான விமர்சனங்களை கேப்டன் பாபர் அசாம் மீது கொண்டு வந்து இருக்கிறது.
அடுத்த வருடம் டி20 உலக கோப்பையும் 2015 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரும் நடக்க இருக்கிறது. எனவே உலகக்கோப்பை முடிந்து பாகிஸ்தான் நாடு திரும்பியதும், கேப்டன் பாபர் அசாம் மாற்றப்படுவார் என்பது உறுதி என்று தகவல்கள் கூறுகிறது. அதே சமயத்தில் மீதி இருக்கும் போட்டிகளை வென்று அரை இறுதிக்குள் நுழைந்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்கின்ற சூழ்நிலை நிலவுகிறது.
புதிய பாகிஸ்தான் அணியை உருவாக்குவதற்கு கேப்டன் பாபர் அசாமுக்கு முழு அதிகாரமும், சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவருக்கு எந்த வீரர்கள் தேவையோ அவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தார்கள். இவர் விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் முடிவுகள் தவறாக வந்ததால் தற்பொழுது எல்லாம் பறிக்கப்பட இருக்கிறது.
புதிய கேப்டன் பதவிக்கான ரேஸில் பழைய கேப்டன் சர்ப்ராஸ் அகமது, ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது ரிஸ்வான் என மூன்று பேர் இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி கேப்டன் ஆவதற்காக வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் கேப்டனாக திறமையாக செயல்பட்டு வருகிறார்.
உலகக்கோப்பை முடிந்து ஆஸ்திரேலியா செல்லும் பாகிஸ்தான் அணி புதிய கேப்டனோடு பயணம் செய்யும்போது உறுதி என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறப்படுகிறது. அதேசமயத்தில் உலகக்கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுது கேப்டனை மாற்றுகின்ற எண்ணம் இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவாக அறிவித்துவிட்டது!