நமீபியா இலங்கையை வீழ்த்தியது; இந்திய அணிக்கு ஏன் ஆபத்து? – டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று!

0
81783
T20iwc2022

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தகுதி சுற்று போட்டிகள் துவங்கியது. இந்தத் தகுதி சுற்று போட்டியில் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 2 பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், நேரடியாகத் தகுதிபெற்ற எட்டு அணிகளுடன் சேர்ந்து, 12 அணிகளைக் இரண்டு 2 குழுக்களாக கொண்டு நடத்தப்படும் பிரதான சுற்றுக்கு நுழையும்!

இன்று குழு ஏ வில் இலங்கை நமீபியா மோதும் போட்டி ஆஸ்திரேலியாவில் கீலாங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

நமீபியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சீக்கிரத்தில் வெளியேறினார்கள். அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வீசாவும் கோல்டன் டக் அடித்தார். ஆனால் மற்ற 5 பேட்ஸ்மேன்கள் 20, 26, 20, 44, 31 என சீரான பங்களிப்பைத் தர, 20 ஓவர்கள் முடிவில் நமீபியா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது நிசாங்கா, குசால் மெண்டிஸ், தனஞ்சய மூவரும் சீக்கிரத்தில் வெளியேற, அடுத்து வந்த குணதிலக கோல்டன் டக் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு அடுத்து பனுக ராஜபக்சே 20 மற்றும் கேப்டன் சனகா 29 கொஞ்சம் தாக்கு பிடித்தனர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இறக்கவில்லை. 19 ஓவர்களில் 108 ரன்களுக்கு சுருண்டு 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது இலங்கை அணி.

இலங்கை அணியின் இந்தத் தோல்வி இந்திய அணிக்கு ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கி உள்ளது. அது என்னவென்றால் ; இந்தக் குழுவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி இந்திய அணி இடம் பெற்று இருக்கும் குழுவில் நுழையும். தற்பொழுது இந்தக் குழுவில் இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்பு இலங்கை அணிக்குத்தான் இருக்கிறது. அதே சமயத்தில் பி குழுவில் முதலிடம் பிடிக்கும் அணி இந்தியாவின் குழுவுக்குள் நுழையும் . இதற்கு அதிகபட்ச வாய்ப்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தான் இருக்கிறது. இந்த வகையில் பார்த்தால் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் குழுவில், பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என சர்வதேச அனுபவமுள்ள வலிமையான அணிகள் தான் இடம்பெறும் என்பது நல்ல விஷயம் அல்ல!

ஆஸ்திரேலியாவில் இன்று துவங்கியிருக்கும் எட்டாவது டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியே மிகப்பெரிய மாற்றத்தை பிரதான சுற்று குழுக்களில் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்து, கிரிக்கெட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை, ஆர்வத்தை பெரிய அளவில் உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கிறது!

- Advertisement -