நமன் ஓஜா அடித்த 140 ரன்கள் வீண் ; 19 பந்தில் அதிரடியான அரை சதம் விளாசி இந்தியாவை வீழ்த்திய இம்ரான் தாஹிர் – வீடியோ இணைப்பு

0
174
Imran Tahir and Naman Ojha

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விளையாடி வந்தாலும் அந்த தொடரை ஏற்கனவே இழந்து விட்டது. முதல் இரண்டு போட்டிகளில் வரிசையாக தோல்வியுற்றதால் இந்த தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் தங்களது கவனத்தை இந்த தொடரிலிருந்து ஓமன் நாட்டில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடருக்கு திருப்பியுள்ளனர். ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவதால் ஆரம்பத்தில் இருந்தே இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா மகாராஜ் மற்றும் வேர்ல்ட் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா மகாராஜ் அணிக்கு நமன் ஓஜா மற்றும் வாசிம் ஜாபர் துவக்கம் கொடுத்தனர். வேர்ல்ட் ஜெயன்ட்ஸ் அணியின் சைடுபாட்டம் வீசிய ஓவரில் வரிசையாக ஜாபர் மற்றும் பத்திரிநாத் என இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். அதன்பின்பு ஜோடி சேர்ந்த நமன் ஓஜா மற்றும் முகமது கைப் கூட்டணி ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்தது.

அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா சதம் கடந்து அசத்தினார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய கேப்டன் கைப் அரைசதம் அடித்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகாராஜா அணி 209 ரன்கள் எடுத்தது. 210 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய வேர்ல்ட் ஜெயன்ட்ஸ் அணி வரிசையாக முதலில் விக்கெட்டுகளை விடத் தொடங்கியது. அந்த அணியின் கெவின்-ஓ-பிரையன், டிராட், ஆண்டர்சன் என யாவருமே பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

இருந்தாலும் அந்த அணியின் கேப்டன் பீட்டர்சன் 27 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதற்கு பின்பு வந்த ஹாடின், மார்க்கெல் மற்றும் சமி என அனைவருமே தங்களால் இயன்ற அளவுக்கு அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியாக விளையாடிய தாகீர் 19 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சருடன் இவர் அதிரடியாக விளையாடியதால் வேர்ல்ட் ஜெயன்ட்ஸ் அணி இந்த தொடரில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

வரும் திங்கட்கிழமை நடந்த இருக்கும் ஆட்டத்தில் இந்திய மகாராஜா அணி மற்றும் ஆசிய லயன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் ஆவது சேவாக் யுவராஜ் போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்பார்களா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்