எதிரணி பற்றி கவலையில்லை; டி20, ஓடிஐ-ன்னு கேம் மாறலாம், ஆனா என்னோட ஆட்டம் மாறாது – முதல் போட்டியில் இடம்கிடைத்த பிறகு பேசிய சூரியகுமார் யாதவ்!

0
50

டி20 அல்லது ஒருநாள் போட்டிகள் எதுவாக இருந்தால் என்ன, என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் எனப் பேசியுள்ளார் சூரியகுமார் யாதவ்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்திருக்கிறது.

இந்த ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இல்லை. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். ஆகையால் இலங்கை அணியுடன் விளையாடிய இந்திய அணியிலிருந்து நான்கு மாற்றங்களுடன் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா களமிறங்குகிறது.

சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாக்கூர் ஆகிய நால்வரும் உள்ளே வந்திருக்கின்றனர். கேஎல் ராகுல், அக்ஸர் பட்டேல் அணியில் இல்லை. உம்ரான் மாலிக் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி:

ரோகித் சர்மா, இஷான் கிஷன், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்த்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது சமி

பிளேயிங் லெவனில் இடம் பெற்ற பிறகு பேட்டியளித்த சூரியகுமார் யாதவ் கூறுகையில், “ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். எனது ஆட்டத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. எனது ஆற்றல் மற்றும் அணுகுமுறை ஒன்றுதான். நல்ல மனநிலையில் இருக்கிறேன். மைதானத்தின் கண்டிஷன் புரிந்து கொண்டு போட்டிக்கு ஏற்றவாறு விளையாடுவேன்.

எதிரணி யார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. என்னுடைய ஆட்டத்தில் நான் கவனத்துடன் இருக்கிறேன். ஹைதராபாத் மைதானத்திற்குள் வந்தபோது மக்கள் எனக்கு கொடுத்த வரவேற்பிற்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தனை போட்டிகளில் நன்றாக விளையாடியதன் பலனாக இந்த வரவேற்பை பார்க்கிறேன். அதைப்புரிந்து கொண்டு இனிவரும் போட்டிகளிலும் அதே அணுகுமுறையை வெளிப்படுத்தி அணிக்கு பங்களிப்பை கொடுப்பேன்.” என்றார்.