இந்த ஒரு விஷயத்திற்காக என் தந்தை மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தார் – ரிங்கு சிங் வருத்தம்

0
399
Rinku Singh KKR

நேற்று நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், கொல்கத்தா, லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி, இந்த ஐ.பி.எல் சீசனின் மிக பரபரப்பான ஒரு போட்டியாக நடந்து முடிந்தது. இரு அணிகளும் சேர்ந்து 40 ஓவர்களில் 418 ரன்களை குவித்தன!

முதலில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கோடு, லக்னோவின் இன்னிங்ஸை பேட்டிங்கில் துவங்க களமிறங்கினார். இந்த துவக்க ஜோடி நேற்று கடைசிவரை விக்கெட்டையே தராமல், ஐ.பி.எல்-ல் அதிகபட்ச ரன்களை அடித்த துவக்க ஜோடி என்ற சாதனையைப் படைத்தது. குயின்டன் டிகாக் சதமடித்தார். கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 210 ரன்களை குவித்தது!

- Advertisement -

அடுத்து 211 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்திலேயே விழுந்துவிட்டார்கள். ஆனால் நிதிஷ் ராணா, ஸ்ரேயாஷ், சாம் பில்லிங்கிஸ் சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி சென்றனர். இவர்கள் மூவரும் ஆட்டமிழக்கவும் கொல்கத்தா அணி நெருக்கடியில் விழுந்தது. ஆனால் கடைசிக்கட்டத்தில் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங், சுனில் நரைன் ஜோடி பிரமாதப்படுத்தியது. கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட, ரிங்குசிங் நான்கு பந்துகள் 18 ரன்களை கொண்டுவந்தார். ஆனால் அவர் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழக்கவும், கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தின் இறுதி ஓவரில் கலக்கிய ரிங்கு சிங், அவரின் கடினமான காலங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார் அதில் “கடந்த விஜய் ஹசாரே தொடரின் போது ரன் எடுக்க ஓடி விழுந்ததில், என் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பரிசோதித்துப் பார்த்ததில், ஆபரேசன் செய்யவேண்டும், ஆறேழு மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்று தெரிவித்தார்கள். நான் காயமடைந்து கிரிக்கெட் விளையாடாமல் வீட்டில் இருந்தபொழுது, என் தந்தை இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடவில்லை. ஏனென்றால் நான்தான் எங்கள் குடும்பத்தின் ஆதாரம். பின்பு இதெல்லாம் கிரிக்கெட்டில் ஒரு பகுதி என்று என் தந்தைக்குப் புரிய வைத்தேன். ஆனால் நான் அப்போது வருத்தமாகத்தான் இருந்தேன். ஆனால் என்னால் மீண்டு வரமுடியும் என்று உறுதியாக நம்பினேன்” என்று தெரிவித்திருக்கிறார். ரிங்குசிங் மிக வறுமையான குடும்ப பின்புலத்தில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!