இந்த இந்திய வீரருக்கு எதிராக என் பந்துவீச்சு தந்திரம் பலிக்காது – ஹர்சல் படேல் வெளிப்படையான பேச்சு!

0
1593
Harshal

ஐபிஎல் தொடர் வருகைக்கு பிறகு, ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய அணிக்குள் வரும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. முன்பு ரஞ்சி போட்டிகளில் இருந்தும், விஜய் ஹசாரே போட்டிகளில் இருந்தும் வீரர்கள் வந்தார்கள்!

உதாரணமாக ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ஆர் அஸ்வின், மோகித் சர்மா, ருதுராஜ், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹர், தீபக் சஹர், ரிஷப் பண்ட் போன்றவர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய அணிக்குள் வந்தவர்களில் முக்கியமானவர்கள்!

இவர்களைப் போலவே ஐபிஎல் தொடரில் அடையாளம் காணப்பட்டு இந்திய அணிக்குள் வந்து தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் ஹர்ஷல் படேலும் ஒருவர்.

குஜராத்தைச் சேர்ந்த இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரின் சிறப்பு என்னவென்றால், குறைந்த வேகத்தில் பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத நேரத்தில் பந்தை வீசி அவர்கள் விக்கெட்டை வீழ்த்துவதுதான்.

ஹர்சல் படேல் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொஞ்சம் சுமாரான பௌலிங் பார்மில்தான் இருக்கிறார். தற்போது இவர் தனது பந்துவீச்சில் இருக்கும் சிறப்பு நுட்பம் பற்றி பேட்டியளித்துள்ளார்.

தனது பந்துவீச்சு பற்றி பேசிய ஹர்சல் படேல் ” என்னிடம் இரண்டு ஆப் கட்டர் பந்துகள் இருக்கிறது. ஆடுகளமும் இயற்கை சூழலும் இந்தப் பந்தை அனுமதித்தால் நான் வீசுவேன். நான் ஆடுகளத்தை பயன்படுத்தி வீச விரும்பவில்லை என்றால் இந்த பந்துகளை பயன்படுத்துவேன். கையின் முன் பகுதியிலிருந்து இந்தவகை பந்தை வீசும் பொழுது அது டாப்ஸ்பின் ஆகிறது. பந்து கொஞ்சம் எகிறும் ஆடுகளங்களில் இந்த வகை பந்துகள் தாக்கம் மிகுந்ததாக இருக்கும். இப்படி வீசும் பொழுது பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கான நேரமும் பாதையும் கிடைக்காது” என்று கூறினார்.

இவரது பந்து வீச்சில் விராட் கோலியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று கேட்ட பொழுது ” நிச்சயமாக விராட் கோலி இந்தவகை பந்துகளை அடித்து விடுவார். இந்தவகை பந்துகள் உடல் பலத்தை நம்பி விளையாடும் வீரர்களுக்கு எதிராக மிக தாக்கம் மிகுந்ததாக இருக்கும். ஆனால் விராட் கோலி அப்படி கிடையாது. விராட் கோலி இப்படியான பந்துகளை கணித்து இறங்கி வந்து ஃபுல் டாஸ் ஆக எடுத்து நேராக மிட் விகெட் திசையில் அடித்துவிடுவார் ” என்று கூறியிருக்கிறார்!