யாரு சாமி நீ! 5 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை தூக்கி லக்னோ அணியை மொத்தமாக காலி செய்த ஆகாஷ் மத்வால்; மும்பை அணி 81 ரன்கள் வெற்றி!

0
1026

ஐந்து ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் ஆகாஷ் மத்வால். லக்னோவை வீழ்த்தி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற மும்பை அணி இரண்டாம் குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அதில் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

- Advertisement -

அவர்களுக்கு அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 41 ரன்கள், சூரியகுமார் யாதவ் 33 ரன்கள், திலக் வர்மா 26 ரன்கள் மற்றும் நேஹல் வதேரா 23 ரன்கள் என பேட்டிங்கில் ஆங்காங்கே நல்ல பங்களிப்பு கிடைத்தது.

இந்த இலக்கை சேஸ் செய்த லக்னோ அணிக்கு மேயர்ஸ், மான்கட் இருவரும் ஓபனிங் இறங்கினர். மேயர்ஸ் 18 ரன்கள், மான்கட் 8 ரன்கள் அடித்து மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்துவந்த க்ருனால் பாண்டியா(8) விக்கெட்டை பியூஸ் சாவ்லா தூக்கினார்.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருத்தர் மட்டுமே நின்று லக்னோ அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வந்தார். போட்டியின் 10ஆவது ஓவரில் தடுமாறி வந்த ஆயுஸ் பதோனி விக்கெட்டை தூக்கினார் ஆகாஷ் மத்வால்.

- Advertisement -

இந்த சீசன் முழுவதும் லக்னோ அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேட்டிங் விளையாடி மூன்று முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்த நிக்கோலஸ் பூரான், இந்த இலக்கை சேஸ் செய்வதற்கு முக்கிய வீரராக பார்க்கப்பட்டார். ஆனால் வந்த முதல் பந்திலேயே அவரது விக்கெட்டை தூக்கினார் ஆகாஷ் மத்வால். இந்த இடத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது.

நன்றாக விளையாடி வந்த ஸ்டாய்னிஸ், ரன் ஓடும்போது தீபக் ஹூடா மீது மோதி தடுமாறி ரன் அவுட் ஆகினார். இவர் 40 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கிருஷ்ணப்பா கவுதம், தீபக் ஹூடா இருவருமே காமெடியாக தவறுகள் செய்து ரன் அவுட் ஆகினர்.

இளம் வேகபந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்களில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்தார்.

16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு லக்னோ அணியை ஆல் அவுட் செய்து 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இரண்டாம் குவாலிபயர் சுற்றுக்கும் முன்னெறியுள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமை நடக்கும் இரண்டாம் குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி!