அம்பத்தி ராயுடுவின் தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது – தோனி கொடுத்த அப்டேட்

0
346
MS Dhoni about Ambati Rayudu's injury

ஐபிஎல் தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்திலேயே சென்னை அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மோசமான தோல்வி பதிவு செய்யும் என்று எதிர்பார்த்த போது சென்னை அணி வெற்றிகரமாக மும்பையை தோற்கடித்தது. 24-4 என்ன ஒரு கட்டத்தில் இருந்த சென்னை அணி கடைசியில் 20 ஓவர்களில் 156 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை கொடுத்தது. முக்கியமான மும்பை அணியின் விக்கெட்டுகளை விரைவாக எடுத்து ஆட்டத்தை தன் பக்கத்தில் திருப்பி கடைசி கட்டத்தில் சென்னை அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சென்னை அணியின் துவக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாடை கேப்டன் தோனி அதிகமாக புகழ்ந்தார். அடி மோசமான நிலையில் இருந்தபோதும் 58 பந்துகளில் 88 ரன்கள் குவித்து அணிக்கு ஒரு நல்ல ஸ்கோரை பெற்றுத் தந்தார். இது குறித்து தோனி பேசும்பொழுது 140 ரன்கள் எடுத்தாலே போதும் என்ற நிலையில் நாங்கள் இருந்தோம். ஆனால் ருத்ராஜ் மற்றும் பிராவோ இணைந்து கிட்டத் தட்ட 160 ரன்கள் பக்கம் எங்களை அழைத்துச் சென்றுவிட்டனர் என்றும் கூறினார்.

மேலும் தோனி பேசும்போது இந்த ஆடுகளம் முதலில் பேட்டிங் ஆடுவதற்கு சற்று கடினமாக இருக்கிறதென்றும் ஆட்டம் போகப் போக ரன்கள் எடுப்பதற்கு சாதகமாக மாறுகிறது என்றும் கூறினார். ஒரு வீரர் கடைசி வரை நின்று ஆடினால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும் என தோனி கூறினார்.

மேலும் ராயுடுவின் காயம் குறித்து கேட்டதற்கு அது ராயுடுவிற்கு தான் காயத்தின் வீரியம் தெரியும் என்றும் கூறினார். ராயுடு மூன்று பந்துகள் பிடித்த நிலையில் பந்து கையில் தாக்கியதால் ஆட்டத்தை தொடர முடியாமல் போனது. தோனி கூறுகையில் ராயுடு நல்ல நிலையில் சிரித்துக் கொண்டு தான் இருப்பதாகவும் எலும்பு முறிவு எதுவும் இருக்காது என்றும் கூறினார்.

மேலும் அடுத்த ஆட்டத்துக்கு நான்கு நாட்கள் இருப்பதால் சீக்கிரம் சரியாகி விடும் எனவும் கூறினார். அடுத்த ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூர் அணியை சந்திக்கிறது. அந்த ஆட்டத்திலும் சென்னை அணியிடம் இருந்து இது போன்ற ஒரு நல்ல ஆட்டத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.