விராட் கோலிக்கு எம்எஸ் தோனி இருந்தார், ஆனால் இங்கு பாகிஸ்தானில் கதையே வேறு – பாகிஸ்தான் வீரர் அகமது ஷேஷாத்

0
230

உலகிலேயே அதிக அரசியல் தலையீடு இருக்கும் ஒரு கிரிக்கெட் வாரியம் என்றால் அது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான். மேலும் அணியில் சீனியர் வீரர்களின் ஆதிக்கமும் பெரியளவில் இருக்கும். தேர்வாளர்களின் அணிதேர்விலும் அரசியல் இருக்கும். அணிக்குள்ளும் அரசியல் இருக்கும்!

தற்பொழுது 30 வயதான பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க வீரர் அகமத் சேஷாத் சில அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். இவர் கடைசியாக விளையாடியது 2019ஆம் ஆண்டு. அதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் விளையாடி இருந்தார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் 50 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக இவர் 81 போட்டிகளில் 3, 614 ரன்களை அடித்திருக்கிறார். இதில் ஆறு சதங்களும், 14 அரைசதங்களும் அடங்கும். இவரின் பேட்டிங் ஸ்ட்ரைக் சற்று சுமார்தான், 70 தான். அதிகபட்ச ஸ்கோர் 124.

டி 20 கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தான் அணிக்காக 59 போட்டிகளில் 1284 ரன்களை அடித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் 25 இன்னிங்ஸில் 982 ரன்களை அடித்திருக்கும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 50. இதில் மூன்று சதங்களும், நான்கு அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 50 என்பது குறைவானது இல்லைதான்!

இப்பொழுது தன் நாட்டு மக்கள் பற்றியும், தன் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள் பற்றியும் பகிங்கரமான குற்றச்சாட்டை, தன் வருத்தத்தை முன் வைத்திருக்கிறார். அணிக்குத் திரும்ப கடுமையாக உழைத்து வருவதாகக் கூறும் அவருக்கு, அவரது இந்தக் கருத்தே எதிராகத் திரும்பினாலும் திரும்பலாம். ஆனாலும் மிகத் தைரியமாக அதைக் கூறியிருக்கிறார்.

அகமது சேஷாத் கூறியது என்னவென்றால்; “நான் முன்பும் சொல்லியிருக்கிறேன். இப்பொழுதும் சொல்கிறேன். விராட் கோலியின் வளர்ச்சி அபரிமாதமானது. காரணம் அவர் எம்.எஸ்.தோனியைக் கண்டுபிடித்தார். ஆனால் இங்கு ஒரு கிரிக்கெட் வீரனின் வெற்றிக்குப் பின்னால் சொந்த நாட்டு மக்களே துணையாய் இருக்க மாட்டார்கள். இங்கு ஒரு கிரிக்கெட் வீரனின் வெற்றியை அணியின் வீரர்களாலும், மூத்த வீரர்களாலும் ஜீரணிக்கவே முடியாது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு துரதிஷ்டமானது” என்று விரக்தியாய் வருத்தத்தோடு கூறியிருக்கிறார்!

தற்பொழுது இவரது இந்தக் கருத்துக்கள் சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவ ஆரம்பித்தால், அது அவரது உள்நாட்டில் அவருக்கு என்ன மாதிரியான மாதிரியான பாதிப்புகளைக் கொண்டு வரும் என்று தெரியவில்லை. ஏற்கனவே இலங்கை அணியுடன் இலங்கையில் நடந்த போட்டி ஒன்றில் திலக ரத்னே தில்ஷானுடன் இவர் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.