தோனி என்னை முழுமையாக வழிநடத்தினார் ; இந்த ஷாட்டை அடிக்க சொன்னதும் அவர்தான் – சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்ட பிரட்டோரியஸ்

0
244
Dwaine Pretorious about MS Dhoni

ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸனின் 33வது போட்டி, இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்னை அணியும், மும்பை அணியும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நேற்று பரபரப்பாய் பலப்பரீட்சை நடத்தி முடித்திருக்கின்றன.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வுசெய்ய, மும்பை அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இளம் வீரர் திலக்வர்மாவின் அரைசதத்தால் 155 ரன்களை இருபது ஓவரின் முடிவில் எடுத்திருந்தது.

அடுத்து 156 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னைக்கு ருதுராஜ் ஏமாற்ற, உத்தப்பா அம்பதி காப்பாற்ற, கடைசி ஓவருக்கு 17 ரன்கள் தேவைப்பட, கடைசி நான்கு பந்துகளில் 16 ரன்களை அடித்து, மிகச்சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைத்திருந்தார் மகேந்திர சிங் தோனி.

இதில் தோனியுடன் 14 பந்துகளில் 22 ரன்களை அடித்த பிரட்டோரியஸின் ஆட்டமும் முக்கியமானது. ஆட்டம் முடிந்து பேசிய அவர் “நான் வந்த முதல் ஓவரில் ஸ்கூப் ஷாட் ஆட தோனியிடம் கேட்டேன். ஆனால் அவர் வேண்டாம் என்றுவிட்டார். பின்பு 19வது ஓவரில் கேட்டபொழுது சம்மதித்தார்” என்று கூறியிருக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் இப்படி நிறைய சுவாரசிய சம்பவங்கள் நடந்து சென்னை இரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி இருக்கிறது!