குல்தீப் யாதவ் மற்றும் சஹால் அணியில் நீடிக்காததற்கு முக்கியக் காரணம் தோனி தான் – தினேஷ் கார்த்திக் விளக்கம்

0
267
Dinesh Karthik about Chahal and Kuldeep Yadav downfall

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு பின்னர் இந்திய அணிக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில், குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஜோடி போட்டி போட்டுக் கொண்டு ஸ்பின் பந்து வீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்தனர். சுமார் இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு மிக சிறப்பாக பந்து வீசி வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர் முதல் இவர்கள் இருவரும் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் இந்திய தேர்வு குழு கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 தொடரில் கூட ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்பின் பந்து வீச்சாளர்களாக விளையாட வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் இருவர் பற்றி எழுந்துவரும் நிலையில், அதற்கு சிறந்த ஒரு பதிலை தற்பொழுது விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் கொடுத்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி இல்லாமல் போனது தான் மிகப்பெரிய காரணம்

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் வரை மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இருந்தார். விக்கெட் கீப்பராக ஸ்டம்புக்கு பின்னால் இருந்து அவர் இவர்கள் இருவரையும் மிகச் சிறப்பாக வழிநடத்தினார். விராட் கோலி கேப்டனாக இருந்த போதிலும் அவர்கள் இருவரும் இவரது பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் பந்து வீசுவார்கள்.

பந்து வீசும் பொழுது மூன்று விஷயங்கள் மிக முக்கியமாக தேவை. எந்தெந்த இடத்தில் எந்தெந்த வீரர்களை நிற்க வைப்பது, எந்த லைன் மற்றும் லெங்க்த்தில் பந்து வீசுவது அதேசமயம் பேட்ஸ்மேன் என்ன நோக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார் அவர் என்ன யோசிக்கிறாய் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு பந்து வீசுவது என இந்த மூன்று விஷயங்களும் மிக முக்கியமாக பார்க்கப்படும்.

இந்த மூன்று விஷயங்களையும் எம்எஸ் தோனி இருக்கும் வரையில் அவர் பார்த்துக் கொண்டார். பல்வேறு போட்டிகளில் விளையாடிய அனுபவம் மற்றும் திறமை காரணமாக அவருக்கு பந்துவீச்சாளர்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்பது நன்கு தெரியும். அதன் அடிப்படையில் அவர் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோரை சிறப்பாக வழிநடத்தி எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்ற வைத்தார்.

ஆனால் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தவுடன் எம்எஸ் தோனி இந்திய அணியில் இல்லாமல் போனது இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அவ்வளவு நாட்களாக அவரது ஆலோசனையுடன் பந்துவீசி வந்த அவர்கள் அதன் பின்னர் நிறைய சிரமப்பட்டார்கள். அவர்களுடைய பின்னடைவிற்கு எம் எஸ் தோனி இல்லாமல் போனதே காரணம் என்று தினேஷ் கார்த்திக் தற்பொழுது கூறியுள்ளார்.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் விளையாடி அங்கு களத்தில் நேரடியாக நிறைய விஷயங்களை பார்த்ததன் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறியது நாம் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் உள்ளது. அவர் கூறிய இந்த விஷயம் தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசு பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.