ரஞ்சி டிரோஃபி 2026-27 சீசன் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைப்பது குறித்த தனது நிலைப்பாட்டை இந்திய அணியின் மூத்த ஃபாஸ்ட் பௌலர் முகமது ஷமி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். பெங்கால் அணியில் இடம்பெற்றுள்ள அவர், டெல்லி அணிக்கு எதிரான தங்களின் முதல் ரஞ்சி டிரோஃபி மேட்ச்சில் விளையாடத் தயாராகி வருகிறார்.
சமீபத்தில் புவனேஸ்வர் குமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, முகமது ஷமியின் கம்பேக் பற்றிய எதிர்பார்ப்புகளும் விவாதங்களும் கிரிக்கெட் ரசிகர்களிடையே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கின.
கடந்த சீசன்களில் பெங்கால் அணிக்காக அனைத்து ஃபார்மட்டிலும் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து, தனது ஃபிட்னஸையும் முகமது ஷமி நிரூபித்துள்ளார். ரஞ்சி டிரோஃபி, விஜய் ஹசாரே டிரோஃபி மற்றும் துலீப் டிரோஃபி தொடர்களில் மிகச் சிறந்த ஆவரேஜில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடர்ச்சியாகத் தந்து வரும் சிறந்த பெர்ஃபார்மன்ஸ் மூலம் தனது ஃபார்மை அவர் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார்.
இந்திய அணித் தேர்வு குறித்து முகமது ஷமி பேசும்போது “புவனேஸ்வர் குமாருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது மிகவும் நல்லது, ஆனால் அவருடைய செலக்ஷன் எனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எனக்கு எங்கு விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், அங்கு நான் என்னுடைய சிறந்த பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்துவேன். இப்போது என்னுடைய முழு கவனமும் இந்த ரஞ்சி மேட்ச் மீது மட்டுமே இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது “கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாகவே எனக்கு இதே விஷயம் தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் பெங்கால் அணிக்காகத் தொடர்ந்து பெர்ஃபார்ம் செய்து என்னுடைய ஃபிட்னஸை நிரூபித்து வருகிறேன். எனக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அது எனக்கு எந்த இழப்பும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.