ஆசிய கோப்பை: சாஹின் அப்ரிடி-க்கு மாற்று வீரர் இவர்தான்; ஐசிசி-யால் தடைசெய்யப்பட்ட பந்துவீச்சாளரை உள்ளே எடுத்துவந்த பாகிஸ்தான்!

0
96

ஆசியக் கோப்பை தொடரில் சாஹின் அப்ரிடிக்கு மாற்று வீரராக முகமது ஹஸ்னைன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

2021 டி20 உலக கோப்பையின் போது இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த சாஹின் அப்ரிடி, பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளராகவும் திகழ்ந்து வந்தார். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியை தொடரின்போது பயிற்சியில் ஈடுபட்டார்.

- Advertisement -

விரைவாக குணமடைந்து விடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோது, மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பாகிஸ்தான் அணியின் தலைமை மருத்துவர், இவர் இன்னும் குணம் அடைவதற்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும் என அறிக்கை வெளியிட்டார். இதனால் ஆசிய கோப்பை தொடரில் சாஹின் அப்ரிடி பங்கேற்க முடியாமல் போனது.

ஆசிய கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த அணியில் சாஹின் பெயர் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் தற்போது இவர் ஆட முடியாத சூழல் வந்துள்ளதால், மாற்று வீரரை தேடும் பணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

தற்போது சாஹின் அப்ரிடிக்கு மாற்று வீரராக களமிறங்கபோவது இளம் வேகம் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. பாகிஸ்தான் அணிக்காக 8 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹஸ்னைன், 29 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு டி20 போட்டிகளில் இவர் விளையாடவில்லை. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது சாஹின் அப்ரிடிக்கு பதிலாக ஆசிய கோப்பை டி20 தொடரில் இடம் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் முகமது ஹஸ்னைன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை செய்யப்பட்டார். இவரது பவுலிங் ஆக்சன் விதிமுறைக்கு உட்பட்டவாறு இல்லை என்று ஐசிசி இத்தகைய முடிவை எடுத்தது. உடனடியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்தும் இவர் விலக்கப்பட்டார். அதன் பிறகு தனது பவுலிங் ஆக்சனை மாற்றி, ஐசிசி முன்பு நிரூபித்த பிறகு மீண்டும் பந்து வீசுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

நடந்து முடிந்த பிக்பாஸ் லீக் தொடரில் மீண்டும் ஒருமுறை இவரது பவுலிங் ஆக்சன் சர்ச்சைக்கு உள்ளாகியது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ் இவரது பந்துவீச்சு குறித்து கேள்வி எழுப்பினார். இவரை பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை டி20 தொடரில் விளையாடுவதற்கு உள்ளே எடுத்து வந்திருக்கிறது.

ஆசிய கோப்பை டி20 தொடரில், பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியல்:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷனவாஸ் தஹனி, உஸ்மான் காதர்.