6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதைக் குறித்து ஸ்டார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
440
Mitchell Starc IPL

இந்திய அணி தற்போது தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தொடர் சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்ல போகும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரண்டு அணி வீரர்களும் சிறந்த உத்வேகத்துடன் விளையாடி வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருந்தாலும் தற்போது ரசிகர்களின் பார்வை ஐபிஎல் தொடரின் மீது திரும்பி விட்டது. வரும் பிப்ரவரி மாதம் 12,13 தேதிகளில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறோம் என்ற பட்டியலை ஏற்கனவே அந்த அணியினர் வெளியிட்டுவிட்டனர். தற்போது ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை இணைப்பது குறித்து பேசியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.

கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டார்க் விளையாடினார். இதுகுறித்து பேசியுள்ள மிட்செல் ஸ்டார்க், தான் இன்னும் தனது பெயரை ஏலத்திற்கு கொடுக்கவில்லை என்றும் ஆனால் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார். ஏலத்திற்கான பெயர்களை கொடுக்க இன்னமும் இரண்டு நாட்கள் உள்ளதால் ஸ்டார்க் இதுகுறித்து தற்போது பரிசீலித்து வருகிறார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு அந்த நேரத்தில் வேறு ஏதும் மாற்றங்கள் இருக்கிறதா என்பதைப் பார்த்து இதை முடிவு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார் ஸ்டார்க்.

- Advertisement -

தான் ஐபிஎல் தொடரில் விளையாடி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்றும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு இருக்கும் ஆட்டங்களை பொறுத்துதான் முடிவு எடுக்கப்படும் என்றும் மூன்று வகை கிரிக்கெட்டும் விளையாடும் வீரர்களுக்கு இதுபோன்ற தொடர்களில் விளையாடுவது சாதாரண காரியம் அல்ல என்றும் ஸ்டார்க் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகள் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள ஸ்டார்க் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது அதிவேக யார்க்கர்கள் எவ்வளவு பெரிய பேட்டிங் வீரர்கள் தடுமாறச் செய்யும் என்பதால் இவரை தங்கள் அணிக்கு எடுக்க நிச்சயம் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது