தினேஷ் கார்த்திக் தேவையில்லை ! ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யுங்கள் ! காரணம் இதுதான் – மைக்கல் வாகன் அதிரடிப் பேச்சு

0
202
Michael Vaughan about Dinesh Karthik and Rishabh Pant

இந்திய கிரிக்கெட் அணி பெரிதாய் ஐ.சி.சி கோப்பைகளைக் கைப்பற்றவில்லை என்றாலும், இரண்டு வலிமையான அணிகளைத் தேர்வு செய்யும் அளவிற்கு திறமையான வீரர்கள் பலர் வந்துகொண்டே இருக்கிறார்கள். இதனால் இந்திய கிரிக்கெட் தேர்வு குழுவிற்கு யாரை எடுப்பது? யாரை நீக்குவது? யார் யாரைக் கொண்டு ஒரு நிரந்தர அணியை உருவாக்குவதென்று பெரிய நெருக்கடியும், குழப்பமும் நிலவுகிறது!

ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் கிரிக்கெட் விளையாடுவதின் மூலம் இப்படியான சிக்கலைத் தீர்க்கவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சிகளை எடுத்து வருகிறது. முதன் முதலில் ராகுல் டிராவிட் பயிற்சியில் ஷிகர்தவான் தலைமையில், இலங்கை அணியுடனும், லஷ்மன் பயிற்சியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் அயர்லாந்து அணியுடனும் இரண்டாவது இந்திய அணி விளையாடியது. தற்போது இப்படியான இரண்டாவது இந்திய அணியை லஷ்மன் பயிற்சியின் கீழ் ஜிம்பாப்வேற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்புகிறது.

- Advertisement -

ஆனாலும் இந்தச் சிக்கல் தீர்ந்தபாடில்லை. காரணம், ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கின்ற டி20 உலகக்கோப்பைக்கான வீரர்களைத் தேர்வு செய்வதில் இந்திய தேர்வு குழுவிற்கு தலைவலியே நீடிக்கிறது. விராட் கோலியின் பேட்டிங் பார்ம், ஸ்ரேயாஷ் ஐயர் டி20 பார்ட்டிற்கு பொருந்துவாரா? இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாடு என முக்கிய விசயங்களில் கவனம் செலுத்தி சரியான முடிவுகளை எடுக்க வேண்டியதாய் இருக்கிறது.

மேலும் தற்போது இந்திய அணியின் உள்ளே ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான் என மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதில்லாமல் காயத்தால் விக்கெட் கீப்பிங் செய்ய முடிந்த கே.எல்.ராகுல் இருக்கிறார். எப்படியும் உலகக்கோப்பைக்கு முன் அவர் அணிக்குத் திரும்புவார். இதில் யாரைத் தக்கவைப்பது என்று பெரிய குழப்பத்தில் தேர்வு குழு இருக்கிறது.

இது சம்பந்தமாகக் கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் “இப்போதிருக்கும் வீரர்களை யார் யாரை வைத்து, உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு செய்யப்படும் எனப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். கே.எல்.ராகுல் திரும்ப வருவார். ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவர்தான் இருக்க முடியும். இரண்டு பேரும் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ரிஷாப் பண்ட் இடக்கை பேட்ஸ்மேன் என்பதால் அவர் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்” என்றார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் தொடர வேண்டும் என்றால், ரிஷாப் பண்ட் துவக்க வீரராகக் களமிறங்கினால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் அப்படி நடக்கவில்லை என்றால் தினேஷ் கார்த்திக் தேர்வாவது கடினமான ஒன்றாகவே இருக்கலாம். அருகில் இருக்கும் டி20 தொடர்களில், கே.எல்.ராகுல் அணிக்குத் திரும்புவதற்கு முன்னால், தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாட வேண்டியது கட்டாயம் ஆகிறது!